பக்கம்:அபிதா.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 73


நாளைக்குத் தூக்கிட வேண்டியதுதான். அபிதா, கேக்கறேனே நீ ஏன் வர்லே?”

“ஆமாண்டா, உன் அத்திம்பேரை நம்பி வாசற் கதவையும் திறந்து போட்டுட்டு, நான் இவளையும் உன் அவிசல் படத்துக்கு அழைச்சுண்டு வந்துடறேன். திரும்பி வர வேளைக்கு இருக்கற வாசல் கதவையும் எவனாவது அடுப்புக்குப் பிடுங்கிண்டு போயிடட்டும். அந்தப் பிராம்மணன் இன்னமும் வரல்லியே? எனக்குத் தெரியும். அங்கேயே குளத்துல குளிச்சுட்டு, நேத்து சோத்தையே சாமிக்குக் காட்டிப்பிட்டு ஒரு நடை மிச்சம் பண்ணிண்டு வந்துடுவார்-”

......கேட்டுக் கொண்டே குருக்கள் உள்ளே வருகிறார். அவர் தோளில் தொங்கும் நைவேத்ய மூட்டையும், கபடும் அசடும் கலந்த அந்த இளிப்பும்- அவரைப் பார்த்தால் சர்க்கஸ் கோமாளிபோல் தானிருக்கிறது. அவர் வராததைக் கேட்டுக் கொண்டிருந்தவள் கூட அவர் வந்ததைச் சட்டை செய்வதாய்த் தெரியவில்லை. அவர் மைத்துனன் அவர் வீட்டில் அவர் இருப்பதாக ஏற்றுக் கொண்ட தாகவே தெரியவில்லை. அவன் என்னோடுதான் பேசிக் கொண்டிருக்கிறான். என்ன பேசுகிறான் என்று அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே எனக்கு மறந்து போய்க் கொண்டே வருகிறது. பலகையில் வலது கை எழுத, பின்னாலேயே இடது கை அழித்துக் கொண்டு வருவது போல்.

ஆனால் அவன் கதையை அவன் சொல்லி நான் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. அவன் உடையும், ஒழுங்காக ஒதுக்கிவிட்ட அரும்பு மீசையுமே அவன் வெற்றிக் கதைக்கு சாட்சியாய் அலறுகின்றன. என்னையறியாமலே ஒரு காதைக்கூடப் பொத்திக்கொண்டு, பிறகு பொத்தினது தெரியாமலிருக்கும் பொருட்டு காதின்பின் சொறிந்து கொள்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/79&oldid=1130507" இலிருந்து மீள்விக்கப்பட்டது