பக்கம்:அபிதா.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84 0 லா. ச. ராமாமிருதம்


என்மேல் மோதுவதுபோல் என்னைச் சுற்றிச் சுற்றி முங்கி முங்கி எழுந்தது.

ஓயாத ஒரே முச்சு ரீங்காரம் இது எப்படி சாதிக்கிறது? அடுத்தடுத்து என்னை மோதுகின்றது. முகத்தைக் கைகளால் மறைத்துக் கொள்கிறேன். அது அப்பவும் விடவில்லை. குரல்வளையைத் தேடி வளைந்த விரல்கள் போல் கொடூரமான கொடுக்குகள், வடித்த விஷத்தைக் குடுக்கையில் அடைந்தாற்போன்று சக்குவின் கோபமா? தன் சினத்தைச் சிதற இந்த ரூபத்தில் எனக்காகக் காத்துக் கிடந்தாளா?

ஏய், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல்கூட எப்படிப் போனாய்?

போனாலும் எப்படி இத்தனை நாள் திரும்பாமல் இருந்தாய்?

இருந்தாலும்தான் இருந்தாய், ஆறாத புண்ணைக் கிளறி விட ஏன் இப்போது திரும்பி வந்தாய்.

சக்கு அடியே! நீ நெஞ்சின் எதிரொலியாகிவிட்டாய். எதிரொலிக்கு என்ன பதில் சொல்லி மீள்வேன்?

எங்கிருந்தோ யாருடைய சிரிப்போ எதிரொலிக்கிறது.

வாழ்க்கையின் ஏடுகளைத் திரும்பிப் புரட்டுகையில் அத்தனையும் எப்படியோ குற்றப் பத்திரிகையாகவே படிக்கின்றன. கோட்டைவிட்ட சந்தர்ப்பங்கள், அவசரப் பட்டுவிட்ட ஆத்திரங்கள், மீள முடியாத பாதைகள், அசலுக்கும் போலிக்கும் இனம் தெரியாது ஏமாந்து லேவாதேவிகள், இனாமுக்கு ஆசைப்பட்டு முதலே பறிபோன இழப்புகள், கண் கெட்டபின் விழுந்து விழுந்து சூர்ய நமஸ்காரங்கள்- ஏற்றலும் தாழ்த்தலுமாய் ஒயாத, பழங்கணக்கு, அத்தனையும் தப்புக் கணக்கு. ஆத்திரத்தில் ஸ்லேட்டைக் கீழே போட்டு உடைத்தால் அவ்வளவுதான்; உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/90&oldid=1130516" இலிருந்து மீள்விக்கப்பட்டது