பக்கம்:அபிதா.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா 0 85


எங்கிருக்கிறேன்? சொறிநாய் சுருண்டு படுத்துக் கொண்டாற்போல் ஒரு வளையத்தில் ஒரு கரைமேடு; இது கன்னிக்குளமல்லவா? என் யோசனை வழியில் ரொம்ப தூரம் வந்திருக்கிறேன். இந்த ஜலத்தின் தெளிவு பளிங்கு தோற்றது. கரையிலும் குளத்திலும் பூரா சின்னதும் பெரிதுமாய் ஒரே கூழாங்கற்கள், கடுங்கோடையிலும் இந்தக் குளம் வற்றுவதில்லை. ராக்ஷஸத் தோடு பதித்தாற்போன்று நூற்றுக்கணக்கான வருடங்களில் அடுக்கடுக்காய்ப் புதைந்து போன கற்களின் திட்டுக்களினடியில் எங்கோ ரகஸ்ய ஊற்றிலிருந்து ஜலம் கசிகின்றது.

கல்வடித்த கண்ணீர்.

இங்கு அல்லியும் பூத்ததில்லை. ஆம்பலும் தலை நீட்டியதில்லை, உச்சிவெயில் குளத்தில் அடிவயிறு பளீரென்று தெரியும். அடிவயிற்றின் தொப்புள் குழிகூட இஷ்டப்பட்டால் தெரியும். நடுப்பகலின் வெட்ட வெளிச்சத்தில், வெறிச்சிட்டு, தனிப்பட்ட குளம். தண்ணீர் கற்கண்டாயினும் யார் இவ்வளவு தூரம், பானையையோ குடத்தையோ தூக்கிக் கொண்டு வருவது? ஆகையால் இதன் தண்ணீர் செலவாவதில்லை. அதனாலேயே பேரும் கன்னிக்குளம்.

வெய்யிலின் வெம்மை, தோல்மேல் ஏறுகிறது. குனிந்து காலடியில் ஒரு வெள்ளைக் கூழாங்கல்லைப் பொறுக்குகிறேன். பூஜையில் வைக்கலாம், அவ்வளவு உருண்டை, மழமழ. ஒன்றைப்போல் பல குட்டிக் கருவேல நாதர்கள், கெட்டிக் கருவேல நாதர்கள். கீழே போட்டு உடைத்தாலும் உடைந்தாலும் பளார் எனப் பிளந்துபோமே யன்றி குட்டு உடையாது. அவைகளின் ரகஸ்யம் காலத்துக்கும் பத்ரம்.

பார்வைக்கு இது என் கையில் அடங்குகிறது; ஆனால் வயதில் என்னைப்போல் எத்தனை பேரை இது விழுங்கியிருக்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/91&oldid=1130519" இலிருந்து மீள்விக்கப்பட்டது