பக்கம்:அபிதா.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 89


குரல் கேட்டு திரும்புகிறோம். அபிதாவும் ஒரு பசுவை ஓட்டிக்கொண்டு வருகிறாள். தன் இனத்தை அது கண்டுவிட்டது; இனி அதை ஒட்டத் தேவையில்லை. அதற்குக் குஷி அதற்கு மந்தையின் ஈர்ப்பு கண்டுவிட்டது. பீப்பாய் உடல் குலுங்க ஓடி வந்து, நிரையுடன் கலந்துவிட்டது.

அபிதா வந்து, எங்களோடு நின்றாள்.

ஒன்றாயும், இரண்டாயும் மாடுகள் வந்து சேர்ந்து கொண்டேயிருக்கின்றன. சேரச் சேர அவைகளின், இரைச்சலும், பெரிய வாத்திய கோஷ்டியின் சுருதி கூட்டல் போன்ற விதவிதமான கத்தலும் மணிகளின் கண கணவும் வலுக்கின்றன. காதைப் பொளிகின்றன.

“மாடெல்லாம் பெரிசாயிருக்கேன்னு பார்க்கறேளா?”

“இந்த மாடுகள் பெரிசுன்னா எங்கள் கண்கள் சிறிசு” என்றேன்.

“அப்போ சிறிசாயிருக்கேன்னு பார்க்கறேளா? பெரிசாயிருந்தாலும் சரி, சிறிசாயிருந்தாலும் சரி, கன்னுக் குட்டிக்கு விட்டது போக, சகட்டுக்குக் கால்படிக்குமேல் ஒரு பாலாடைகூடத் தேறாது. அதிலேயேதான் மோர், தயிர், நெய், வீட்டுக்கு வந்த விருந்தாளிக்குக் காபி, வெளி வியாபாரம் ஊர்க்கோலம், வாணவேடிக்கை எல்லாம். வந்த விருந்தாளி பாலிலும் மோரிலும் முகம் பார்த்துக் கொள்ளலாம்.”

அவளுடைய வாய்விட்ட சிரிப்பு எங்களையும் தொற்றிக் கொண்டது.

“வீட்டுக்கு வீடு இந்தக் காமதேனு இல்லாட்டா, அதுவும் தகராறுதான். என்னதான் இருந்தாலும் நாட்டு மாடுதானே! மாமா சொல்றா— அதான் சித்திக்குத் தம்பி— அவர் எங்கெங்கேயோ ஊரெல்லாம் சுத்தி யிருக்கார்- என்னென்னெல்லாமோ பார்த்திருக்காராம்—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/95&oldid=1130535" இலிருந்து மீள்விக்கப்பட்டது