பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

73



அளியார் கமலத்தில் ஆரணங் -
கேஅகி லாண்டமும்நின்
ஒளியாக நின்ற ஒளிர்திரு
மேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தக் கரணங்கள்
விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின்எங்ங னேமறப்
பேன்நின் விரகினையே.

(உரை) வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரில் எழுந்தருளிய தேவி, சகல அண்டங்களும் நின் ஒளியாகப் பரவி நிற்கக் காரணமான, பிரகாசிக்கும் அழகிய நின்றன் திருமேனியைத் தியானிக்குந்தோறும் என் அந்தக்கரணங்கள் ஆனந்த மயமாகிப் பூரித்துத் தத்துவ எல்லைகளைக் கடந்து பரவெளியாகி விடுவதாயின், நீ இயற்றிய இந்த அதிசய உபாயத்தை எவ்வாறு அடியேன் மறப்பேன்?

"வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும், களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை" (19) என்றார் முன்னும். தியானத்தால் அந்தக் கரணத்தில் இன்பம் உண்டாவதையும் தியானம் வலிபெறப் பெறக் கருவி கரணம் கழன்ற நிலையில் பரவெளியில் லயித்துச் சிவானந்த அநுபவம் பெறுதலையும் கூறினார்.

கமலத் தணங்கு: 1, 5, 20, 58, 80. அகிலாண்டமும் நின் ஒளி: "இறைவி யொளிவெளி எங்குமே" (தக்க. 166) “சகலமு நின்றிருச் சொரூபமென் றோலிடும் சதுர்மறைப் பொருள்" (மீனாட்சி. நீராடல். 3); "அனைத்துந்தன் மயமெனுஞ் சுருதி" (முத்துக்குமார. செங்கீரை.2) வெளியாதல்-அதீத நிலையை அடைதல்.

82