பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

77

உலகம் முழுவதும் பழிக்கும்படி குலைத்து அவர் திருமேனியில் ஒரு பாகத்தைக் கைக்கொண்டு ஆட்சி செய்யும் பராபரையே, சொல்லுக்கும் எண்ணத்திற்கும் எட்டாத நின் திருவுருவமானது அடியேனுடைய கண்களுக்கும் பூசை முதலிய கிரியைக்கும் வெளிப்பட்டு நின்றது; இஃது என்ன ஆச்சரியம்!

அம்பிகை அவாங்மனோ கோசர மூர்த்தியை உடையவள்! 'மனோ வாசாமகோசரா' (லலிதா, 415). வினை-செயல்: இங்கே பூசை முதலிய கிரியாபாதத்துக்குரியவற்றை. வினைக்கு-வினையின் விளைவாக எனலும் ஆம். இச் செய்யுளுடன் 65-ஆம் செய்யுள் ஒப்பு நோக்குதற்குரியது. பராபரை - மேலானவற்றினும் மேலானவள்.

87

பரம்என் றுனைஅடைந் தேன்தமி
யேனும்என் பத்தருக்குள்
தரம்அன் றிவன்என்று தள்ளத்
தகாது தரியலர்தம்
புரம்அன் றெரியப் பொருப்புவில்
வாங்கிய போதில்அயன்
சிரம் ஒன்று செற்றகை யான்இடப்
பாகம் சிறந்தவளே.

(உரை) பகைவராகிய அசுரருடைய முப்புரங்களும் அன்று எரியுமாறு மேருமலையாகிய வில்லை வளைத்த திருக்கரத்தானும், வெண்டாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம தேவனது தலையொன்றைத் தடிந்த திருக்கரத்தானுமாகிய சிவபிரானது வாமபாகத்தில் எழுந்தருளிச் சிறப்புற்றோய், வேறொரு பற்றுக்கோடற்ற தமியேனாகிய யானும் உன் பாரம் என்று முறையிட்டு நின்னைப் புகல் அடைந்தேன்; நின் பக்தருக்குள் சேரும் தகுதியுடையவன் அல்லன் இவன் என்று கருதி நீ, தள்ளினால் அது நின் பெருமைக்குத் தகாது.