பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

81

(உரை) மும்மூர்த்திகளும் பிறர் யாவரும் வணங்கித் துதிக்கும் அரும்புகின்ற புன்னகையை உடைய தேவி, நல்ல பக்குவம் பெற்று அப்பக்குவத்தில் என் உள்ளம் உருகி நின் திருவடியில் பற்றுக்கொண்டு நின் திருவுள்ளத்துக்கு, உவப்பான நெறியிலே ஒழுகும்படி அடியேனை ஆட்கொண்டாய்; ஆதலின் யான் இனிமேல் வேறொருவர் சமயக்கொள்கையைப் பெரிதென்று எண்ணி அறிவு கலங்கேன்; அச்சமயத்தினர் ஒழுகும் வழியிலும் போக மாட்டேன்.

பதம்-அன்பு நிறைந்து நிற்கும் பரிபக்குவம். இதம்-இங்கிதமுமாம். ஒருவர் மதமென்றது பரசமயத்தை; “இனி யெண்ணுதற்குச் சமயங் களுமில்லை" (31). மூவர் போற்றுதல்: 7. 'முதத்தேவர்' என்னும் பாடத்திற்கு மன மகிழ்ச்சியையுடைய தேவரென்று பொருள் கொள்க.

92.

நகையே இஃதிந்த ஞாலம்எல்
லாம்பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை மானே
முதுகண் முடிவில்அந்த
வகையே பிறவியும் வம்பே
மலைமகள் என்பதுநாம்
மிகையே இவள்தன் தகைமையை
நாடி விரும்புவதே.

(உரை) இந்த உலகங்களை யெல்லாம் ஈன்றெடுத்த பரமேசுவரிக்கு அரும்பிய நகில் தாமரை யரும்பு; அருளால் நிரம்பி முதிர்ந்த கண் மருட்சியைப் பெற்ற மான் கண், இங்ஙனம் கூறுதல் சிரிப்புக்கு இடமாம்; அவளுக்கு முடிவும் இல்லை; அவ்வாறே பிறவியும் இல்லை: அப்படி இருக்க அவளை மலைக்கு மகள் என்று கூறுவது வீணே; இங்ஙனம் இவளுடைய ஒன்றற்கு ஒன்று ஒவ்வாத இயல்புகளை ஆராய்ந்து போற்றுதல் நம் அளவுக்கு மிஞ்சிய செயலாம்.