பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

கரிய குழலில் கடம்ப மலரும் பிச்சிப் பூவும் அழகு பெறுகின்றன; மதியை அக்கூந்தலில் அணிந்திருக்கின்றாள்.

இத்தகைய திருமேனிக் கோலத்தைச் சமுதாய சோபையோடு தியானிப்பதையன்றித் தனித்தனியே நயனாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும், சரணாம் புயமும் தஞ்சமாகத் தியானித்துக் கோகனதச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் சிந்தை வைத்து அபிராமியின் கோலமெல்லாம் குறித்து இன்புற்றவர் இவ்வாசிரியர். இந்தத் தியானம் வீறு பெறப் பெற இவர் எங்கும் அம்பிகையின் திருக்கோலத்தையே காணும் அநுபவத்தைப் பெற்றதை,

"பார்க்குந் திசைதொறும் பாசாங் குசமும் பனிச்சிறைவண்
டார்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்என் அல்லலெல்லாம்
தீர்க்கும் திரிபுரை யான்திரு மேனியும் சிற்றிடையும்
வார்க்குங் குமமுலை யும்முலை மேல்முத்து மாலையுமே”

என்ற அழகிய பாடலால் தெரிவிக்கிறார்.

திருவுருவத் தியானத்தோடு, திருநாமங்களைப் பல பல உருவத்தில் சொல்லி இன்புறும் இயல்புள்ளவர் இவர்; "கற்றதுன் நாமம்" (12) என்று சொல்கிறார். அவை நான்மறை சேர் திருநாமங்கள் என்பர். அவற்றைச் சொல்லுவதில் இவருக்கு ஒரு தனியின்பம் முகிழ்க்கிறது. 'தீவினையுடைய அடியேன் தொடுத்த சொற்கள் பொருளற்றனவானாலும் நின் நாமங்களை விரவ வைத்திருக்கின்றேன். அவற்றைக் கூறுமளவிலாவது இவை தோத்திரமாகும்' (66) என்று இவர் உரைக்கின்றார். அம்பிகையை வருணித்தும், இயல் புரைத்தும் சுருக்கமாகவும் பெருக்கமாகவும் இவர் எடுத்தாண்ட திருநாமங்கள் பல. அவை வருமாறு: