பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அபிராமி அந்தாதி


மூத்தவளே என்றும் மூவா
முகுந்தற் கிளையவளே
மாத்தவ ளேஉன்னை அன்றிமற்
றோர்தெய்வம் வந்திப்பதே.

(உரை) உலகம் பதினான்கையும் திருவருளால் ஈன்றோய், அவ்வாறு அருள் கொண்டு ஈன்றது போலவே அவற்றைப் பாதுகாத்தோய், பின்னர் அவற்றைச் சங்காரம் செய்வோய், விடத்தையுடைய நீலகண்டப் பெருமானுக்கு முன் பிறந்தோய், மூப்பை அடையாத திருமாலுக்குத் தங்கையே, பெரிய தவத்தையுடையவளே, அடியேன் உன்னையே தெய்வமாக வழிபடுவதன்றி வேறு ஒரு தெய்வத்தை வழிபடுவது ஆகுமா?

ஆக்கல் முதலிய முத்தொழிலுக்கும் மூல காரணமாயிருத்தல் பற்றிப் பூத்தவளே, காத்தவளே; கரந்தவளே என்றார். "ஈரேழ் புவனமும் பூத்தவுந்திக் கொங்கிவர் பூங்குழலாள்" (75) என்பர் பின். பூத்தவண்ணம் என்ற உவமை, அருள் பெருகிப் பூத்தவாறே அருள் பெருகிக் காத்தாய் என்பதைப் புலப்படுத்தியது (பயன்). பிரமன் முதலிய மூவரிடத்தும் இருந்த முத்தொழிலையும் இயற்றுபவள் அம்பிகை யென்றவாறு; லலிதாம்பிகையின் திரு நாமங்களாகிய ஸ்ருஷ்டி கர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ. கோவிந்த ரூபிணி, ஸம்ஹாரிணீ, ருத்ரரூபா (264-9). த்ரிமூர்த்தி (628) என்பவற்றைக் காண்க. சக்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றுதலின் மூத்தவள் என்றார். தவம் புரிபவள், தவள் (44), சாரியை வேண்டிய வழி இல்லையாயிற்று. வந்திப்பதே : ஏகாரம், வினா.

13

வந்திப் பவர் உன்னை வானவர்
தானவர் ஆனவர்கள்
சிந்திப் பவர்நற் றிசைமுகர்
நாரணர் சிந்தையுள்ளே