பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அபிராமி அந்தாதி

இரதிபதி சயமானது அபசயமாக, மன்மதனை எரித்த கோபத்தையுடைய திருவுள்ளத்தைக் குழைத்து வென்றதை மதி சயமாக என்றார்.

17

வவ்விய பாகத் திறைவரும்
நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்
கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்
பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும்
போது வெளிநிற்கவே.

(உரை) தேவி, உன்னால் கொள்ளப்பட்ட வாம பாகத்தையுடைய சிவபிரானும் நீயும் இணைந்து மகிழ்ந்து ஒன்றியிருக்கும் அவசரமாகிய திருக்கோலமும், உங்கள் திருமணக்கோலமும் என் உள்ளத்துள்ளே இருந்த ஆணவத்தைப் போக்கி என்னைத் தடுத்தாட்கொண்ட பொலிவு பெற்ற திருவடிகளுமாக உருவெடுத்து வந்து வெம்மை மிக்க கூற்றுவன் உயிரைக் கொள்ளும் பொருட்டு என்மேல் எதிர்த்து வரும்போது என்முன் வெளிப்படையாகத் தரிசனம் தந்து நின்றருள்வீர்களாக.

முதலில் கூறியது, அர்த்தநாரீசுவரத் திருக்கோலம்; பின்னது கல்யாணசுந்தர மூர்த்தம். அவ்வியம்-ஆணவம்; "அகந்தைக் கிழங்கை யகழ்ந்தெடுக்கும் தொழும்ப ருளக் கோயிற் கேற்றும் விளக்கே" (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.) மேல்வரும்போது என்றது மரண காலத்தை, கூற்றுவனைக் குமைத்த திருத்தலமாதலின் யம பயத்தைத் தீர்க்க வேண்டுகிறார்.

18

வெளிநின்ற நின் திரு மேனியைப்
பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்ட
தில்லை கருத்தினுள்ளே

-