பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

59

வீணே பலிகவர் தெய்வங்கள்
பாற்சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கன்பு பூண்டுகொண்
டேன்நின் புகழ்ச்சியன்றிப்
பேணேன் ஒருபொழு தும்திரு
மேனிப்ர காசமன்றிக்
காணேன் இருநில மும்திசை
நான்கும் ககனமுமே.

(உரை) தேவி, வீணாக உயிர்ப்பலியை ஏற்றுக் கொள்ளும் புன்சிறு தெய்வங்களிடம் போய் மிக்க பக்தி கொள்ளேன்; நினக்கே அன்பு மேற்கொண்டேன்: ஆதலின் ஒரு காலத்திலும் நின் தோத்திரமன்றி வேறொருவர் துதியைச் செய்யேன்; பெரிய பூமியிலும் நான்கு திசைகளிலும் ஆகாயத்திலுமாகிய எங்கும் நின் திருமேனியின் ஒளியன்றி வேறு ஒன்றைக் காணேன்.

தேவியின் திருமேனிப் பிரகாசம் யாண்டும் பரவியது: "இறைவி யொளிவெளி யெங்குமே" (தக்க. 166).

64

ககனமும் வானும் புவனமும்
காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெரு
மாற்குத் தடக்கையும்செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத்
தோன்றிய மூதறிவின்
மகனும்உண் டாயதன் றோவல்லி
நீசெய்த வல்லபமே.

(உரை) அபிராமவல்லியே, நீ இயற்றிய வலிமைச் செயல், மேலுள்ள உலகங்களும் தேவலோகமும் பூவுலகமும் பார்க்கும்படியாகக் காமனது உடலை முன் ஒரு காலத்து எரித்த யோகியாகிய சிவபெருமானுக்கு விசாலமான திருக்-