பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

அபிராமி அந்தாதி

“கல்வியை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு” (குறள்) என்று கூறுதலின் முதலில் செல்வத்தைத் தந்து பிறகு கல்வியைத் தரும்; “தளர்ந்துழி யுதவுங் கல்வி” (பிரபுலிங்க.. லீலை) ஆதலின் அது பெற்றார்க்குத் தளரா மனம் தருதல் எளிதாம். கனம்-மேகம்.

69

கண்களிக் கும்படி கண்டுகொண்
டேன்கடம் பாடவியில்
பண்களிக் கும்குரல் வீணையும்
கையும் பயோதரமும்
மண்களிக் கும்பச்சை வண்ணமும்
ஆகி மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெரு
மாட்டிதன் பேரழகே.

(உரை) கடம்பவனத்தில், பண்களால் களிக்கும் குரலோடு இசைந்த வீணையும், அதனை ஏந்திய திருக்கரமும், திருத்தன பாரமும், பூவுலகமெல்லாம் தரிசித்துக் களிக்கும் பச்சைத் திருநிறமும் ஆகத் திருக்கோலங் கொண்டு, மதங்கரென்னும் யாழ்ப்பாணர் குலப் பெண்களில் ஒருத்தியாக அவதரித்த எம்பெருமாட்டியின் அளவிடற்கரிய பெரிய அழகை அடியேன் விழிகள் மகிழும்படி தரிசனம் செய்தேன்.

சியாமளா தேவி உருவைக் கூறியவாறு, சியாமளா தண்டகத்தில் இத்திருக்கோல வருணனையைக் காணலாம். கடம்பாடவி: அம்பிகை எழுந்தருளியிருக்கும் சிந்தாமணிக் கிருகம் உள்ள வனம்; 'கதம்பவன வாசினி' (லலிதா. 60);" “கடம்புபொதி காடும்" (மீனாட்சி. சப்பாணி, 4); மதுரையுமாம்.

பண்களெல்லாம் கண்டு களித்தற்குக் காரணமான குரல் எனலுமாம். சியாமளா தேவி கையில் வீணை ஏந்திப் பாடுவதாகக் கூறுவர்; "வீறு மிக்க மாவீணா கரே"