பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
93

முத்தியானந்தம்

அழிக்க எம்பிராட்டி மேற்கொண்ட கோலங்கள். குழந்தைகளாகிய அன்பர்களுக்கு எப்போதும் அவள் இனியவளாகவே இருப்பாள்.

நாம் தேவியினுடைய குழந்தைகள் என்ற நினைவும், அதன் விளைவாக அவளிடத்தில் பேரன்பும் உண்டானால் நிச்சயம் பிராட்டியின் அருள் நமக்கு கிடைக்கும். நாம் தூய மனமுள்ள குழந்தைபோல ஆக ஆக அன்னை நம்மை அணுகி வந்து அருளுவாள். அலுவலகம் போகும் பையன், பள்ளிக்கூடம் செல்லும் மகன், நடைபோடும் இளஞ்செய், கைக்குழந்தை ஆகியவரிடத்துத் தாய்க்கு அன்பு இருப்பது இயல்பு. ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகையில் அன்னை தன் அன்பைக் காட்டுகிறாள் பெரிய மகனைத் தீண்டாமல் அவன் நலங்களைக் கவனிக்கிறாள். பள்ளிக்கூடம் செல்லும் மகனைக் குளிப்பாட்டிச் சட்டை போட்டுவிடுகிறாள். நடக்கத் தெரிந்த இளங்குழந்தையை விளையாட விட்டுவிடுகிறாள். கைக்குழந்தையை எப்போதும் அருகிலே வைத்திருக்கிறாள்; எங்காவது போனால் எடுத்துக் கொண்டு போகிறாள்.

உலகியலில் நாம் வளர வளர அன்னையின் அணைப்பிலிருந்து விலகிக் கொண்டே வருகிறோம். ஆனால் அருளியலில் நாம் வரவரச் சிறு குழந்தையாக வேண்டும். வர வர அன்னையை அணுகி அவள் இடுப்பில் ஏறும் குழந்தையாகிவிட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு கணமும் அப் பெருமாட்டி நம்மைக் கவனிப்பாள். நமக்கென்று ஒரு செயலும் இல்லாமல் இழந்து, 'அம்மா! எல்லாம் உன் செயல்' என்று இளங் குழந்தையாகி விட்டால், நமக்காக அம்மாவுக்குப் பசிக்கும்; நமக்காக அம்மா நடப்பாள்; நமக்காக அம்மா மருந்து உண்பாள்; நமக்காக அம்மா படுத்துக்கொள்வாள்; நமக்காக அம்மா விளையாடுவாள்.