பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அபிராமி அந்தாதி

"அருளது சக்தி யாகும் அரன்றனக்கு" என்பது சிவஞான சித்தியார்.

எம்பெருமாட்டியின் பேரருளுக்கு எடுத்து காட்டாகப் பலவற்றைச் சொல்லலாம். குணம் குறி கடந்த பிராட்டி உமாதேவியாக எழுந்தருளி இமயவரை அரசனுடைய குமாரியாக உலவினாள். அது அவளுடைய கருணைத் திருவிளையாடல் பராசக்தி எட்டாக் கொம்பில் இனிக்கும் பழமாக இருப்பவள்; கனிச்சாறு பிழிந்து மலையிலே ஆறாக ஓடியதுபோல அந்தப் பெருமாட்டியே இமய அரசன் மடமகளாக வந்து துள்ளி விளையாடினாள்; பக்தர்களுக்கு மணக்கோலம் காட்டி மகிழ்வு தந்தாள்; அப்பன் அருகில் அம்மையாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறாள்.

உமையே, இமயத்து அன்றும் பிறந்தவளே!

உமா என்ற திருநாமமே உமை என்று தமிழில் வந்தது. அந்த நாமத்துக்குப் பல வகைப் பொருள் உண்டு. லலிதா சகசிரநாமத்தில 6.33-ஆம் திருநாமமாக உள்ள அதற்குப் பல சிறப்புகளைக் கூறுகிறார், அந்நூலின் பாஷ்யகாரராகிய பாஸ்கரராயர்.

ஓம் என்ற பிரணவம் அகார உகார மகாரங்களால் அமைந்தது. உமா என்பதிலும் அந்த மூன்றும் இருக்கின்றன: உகார மகார அகாரம் என்ற முறையில் உள்ளன. இதைத் தேவிப்ரணவம் என்று சொல்வது மரபு. லிங்க புராணம் மகாவாசிஷ்டமும் இந்த உண்மையை உணர்த்துகின்றன. ஆகவே ஓங்காரத்திற்கு எத்தனை வகையான பொருள்கள் உண்டோ அவ்வளவும் இத்திருநாமத்துக்கும் உண்டு.

உ என்பது சிவபெருமானையும், மா என்பது திருமகளையும் குறிப்பன. சிவபெருமானைத் திருவுடையவனாக,