பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
101

முக்தியானந்தம்

செல்வாய செல்வமுடையவனாகச் செய்பவள் அம்பிகை என்பது. அத்திருநாமத்தால் கிடைக்கும் வேறு ஒரு பொருள்.

அகண்டாகாரமான பரமசிவனை ஆன்மாக்களுக்கு அருள் செய்ய எளிய வடிவுடையவனாக, எல்லைக்குள் அடங்குபவனாகச் செய்பவள் என்பது ஒரு பொருள், காயாம்பூ நிறத்தவள், மஞ்சள் வண்ணமுடையவள். புகழுடையவள், ஒளித்திரு மேனியள் என்ற பொருள்களும் அப்பெயரால் கொள்வதற்கு உரியவை. உத்தமமான சித்தவிருத்தியின் உருவாக விளங்குபவள், பிந்துரூபமான இந்து கலையின் வடிவமுடையவள் என்ற பொருள்களைக் கொள்ளவும் இடம் உண்டு.

உ என்பது அழைக்க உதவுவது; மா என்பது தடுக்க உதவும் சொல். தேவி பார்வதியாகத் திருவவதாரம் , செய்து தவம் புரியச் செல்லும்போது, அவளுடைய இளமையை எண்ணிக் கவலையுற்ற இமராஜன் மனைவியாகிய மேனை, அம்மையை அழைத்துத் தவஞ் செய்ய வேண்டாமென்று தடுத்தாள். அப்படித் தடுக்கப் பெற்ற மையால் உமாஎன்ற திருப்பெயர் அம்மைக்கு வந்தது என்று புராணங்கள் கூறுகின்றன,

விநாயக பீடத்திலும் சிந்து வனத்திலும் தெய்வத் தன்மை மணக்க எழுந்தருளி இருக்கும் அம்பிகைக்கு உமா என்ற திருநாமம் வழங்குகிறது. ஆறு ஆண்டுள்ள கன்னிக்கு உமா என்ற பெயர்.

அப்படிப் பல பல பொருள்களையுடைய உமா என்னும் திருநாமத்தை உடையவள் அம்பிகை. தேவீப்ரணவமாகக் கொள்வதும் தவக்கோலத்துடன் நின்ற பார்வதியைக் குறிப்பதும் ஆகிய இரண்டும் சிறந்தன.