பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108



அபிராமி அந்தாதி


"விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்"

என்பது அங்குள்ள பாடற் பகுதி. "நஞ்சுண்டு கறுத்த கண்டி" என்று பின்னும் பாடுவார்.

நஞ்சையே தன் கண்டத்தில் அமைத்துச் சாவாமல் இருக்கும் அம்பிகைதான் சாவாப் பரம்பொருள்; மூவாத கன்னிகை. அவள்தான் உண்மையான அமுதம். அவளை உட்கொண்டவர்கள் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறுவார்கள். ஆதலின் அபிராமி பட்டர்,

  நிறைந்த அமுதமுமாய்

என்றார். மற்றவை யாவும் குறைவுடைய அமுதம்; சுவை மிகுதிபற்றி அமுதம் என்ற பெயரைப் பெற்றவை. நாம் உண்ணும் உணவில் கறியமுது, சாற்றமுது, இலையமுது ஆகியவை உண்டு. உணவையே அமுதம் என்கிறோம், சிறிது நேரத்திற்கு அவை உயிரைக் காப்பதனாலும், சுவை மிகுதியினாலும் அமுதம் என்று பெயர் பெற்றன. அப்படிச் சொல்வது உபசார வழக்கு. அந்த முறையில் வைத்துத்தான் தேவாமிர்தமும் அமிர்தம் என்ற பெயர் பெற்றது. சாற்றமுதும், சோற்றமுதும் மனிதர்களை உயிர்வாழச் செய்வது போலத் தேவாமிர்தமும் தேவர்களை உயிர் வாழச் செய்கிறது. சாறும் சோறும் மரணத்தை மாற்ற முடியாதது போலத் தேவாமிர்தமும் மரணம் இல்லா வாழ்வைத் தர முடியாது.

தேவராயினும் மனிதராயினும் அம்பிகையாகிய அமுதத்தை உட்கொண்டால் மாயாத நிலையை அடைவர், "மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி, குனிதரும் சேவடிக் கோமளமே" (4) என்று முன்பு சொன்ன பாட்டில் இறைவியைப் பணிபவர்களில் மாயா