பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் தண்ணளி 133

உாகப் புலப்படும்படி அபிராமிபட்டர் எடுத்துக்காட்டு கிறார். அவளுடைய அருமைப்பாட்டைச் சொல்லிப் பின்பு எளிமையைச் சொல்கிறார். அப்போது அந்த எளிமையின் சிறப்பு நன்றாகத் தெரிகிறது. -

அவளுடைய உயர்வு எத்தகையது?

எம்பிராட்டியின் அரண்மனையை நோக்கிப் போக லாம், வாருங்கள். எந்தச் சக்கரவர்த்திக்கும் இல்லாத பெரிய அரண்மனையில் வாழ்கிறவள் அவள். இராஜ ராஜேசுவரி அல்லவா? அந்த அரண்மனையில் எளிதிலே நுழைந்துவிட முடியாது. கட்டுக் காவல் காரணம் அல்ல; அத்தனை கூட்டம். அவளுடைய ஆணைக்கு அடங்கி அவளுடைய கட்டளையை எதிர்பார்த்து, தேவாதி தேவர் கள் நிற்கிறார்கள். நெடுந்துாரத்தில் வரும்போதே நிலத்தில் திருமேனி படிய வணங்கி எழுகிறார்கள். இடுப்பிலே வேட்டியைக் கட்டிக் கைகளைக் கட்டிய படியே நிற்கிறார்கள்.

யார் யார் இப்படி நிற்கிறார்கள்? அதோ இந்திரன்; இதோ வருணன், இவன்தான் அக்கினி, இவன் வாயு; இந்தக் குரூபிதான் குபேரன். அட! சூரியன்கூடத் தூண் ஒரத்தில் ஒதுங்கி நிற்கிறானே! யார் வந்திருக்கிறார்கள் என்று பார்த்துச் சொல்வதைவிட யார் வரவில்லை யென்று சொல்வது எளிது. முப்பத்து முக்கோடி தேவர் களும் வந்திருக்கிறார்கள். அவ்வளவு பேரும் ஒருவர் பின் ஒருவராக அம்பிகையை வணங்கிக் கொண்டே இருக் கிறார்கள்.

வந்திப்பவர் உன்னை வானவர்.

தேவர்கள் மாத்திரமா? அதோ அசுரர்கள்கூட வணங்குகிறார்களே! தேவர்களின் பகைவர்கள் அல்லவா அவர்கள்?