பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ív

அதனாசிரியராகிய ஸ்ரீ கே. ஆர். வேங்கடராமையரவர்கள் அந்தப் பத்திரிகையில் தொடர்ந்து ஏதாவது எழுதி வரவேண்டுமென்று விரும்பினார்கள். அவர்கள் விருப்பப்படியே அபிராமி அந்தாதிப் பாடல்களின் விளக்கத்தைக் கட்டுரை வடிவில் எழுதத் தொடங்கினேன். இன்னும் அந்தக் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அவற்றைப் படித்தவர்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டி எழுதினார்கள். பலர் கட்டுரைகள் புத்தக வடிவில் வரவேண்டும் என்று தெரிவித்தார்கள். முழு நூலும் எழுதிய பிறகு வெளியிடலாமெனின் அது மிகவும் பெரிய புத்தகம் ஆகிவிடும் என்று நினைத்து முதல் 25 பாடல்களின் விளக்கக் கட்டுரைகளை மட்டும் தொகுத்து, அபிராமி அந்தாதி என்ற பெயரில் இந்த உருவத்தில் வெளியிடலானேன்.

அபிராமி பட்டர் ஸ்ரீ வித்யா உபாசகர், தேவி சம்பந்தமான உண்மைகளை நன்கு உணர்ந்தவர், உண்மையான சாக்தர், ஆதலின் அவருடைய நூலுக்கு வேறு சம்பிரதாயப்படி உரை வகுப்பது பொருத்தம் ஆகாது. எனவே, படித்தும் கேட்டும் அறிந்த தேவி சம்பந்தமான கருத்துக்களைக் கொண்டு இந்தப் பாடல்களுக்கு விளக்கம் எழுதத் தொடங்கினேன். தேவி உபாசனைத் துறையில் பெரும் பயிற்சி பெறாதவன் எளியேன். அந்த உபாசனை விரிவானது; நுட்பமானது. எனினும் ஸ்ரீ ஷண்முக நாதனுடைய திருவருளைத் துணையாகக் கொண்டு விளக்கம் எழுதத் தொடங்கினேன்.