பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அந்தரி பாதம்

தன் மனம் போனபடி பல இடங்களுக்குப் போகும் ஆற்றல் இல்லாத குழந்தை தாயை விட்டு அகலாது பக்கத்தில் உள்ள இடங்களுக்குப் போய் அங்குள்ளவர்களோடு சிறிது பழகினாலும் தாயை அடிக்கடி நினைத்துக் கொண்டு ஓடி வரும். அண்ணன். தந்தை, உறவினர், தோழன் என்பவர்களோடு பழகும்; ஆனால் மறுபடியும் தாய் மடியில் வந்து படுத்து இன்புறும்.

பக்தர்கள் இறைவனுடைய திருவடியில் வைத்திருக்கும் பற்று இத்தகையதுதான். அவனுடைய புகழைப் பேசுவார்கள். அவனுடைய அங்கலாவண்யத்தில் ஈடுபடு வார்கள். ஆனால் அடியை மறக்கமாட்டார்கள்; அடுத்தடுத்துத் திருவடியை எண்ணியும் பேசியும் ஆறுதல் பெறுவார்கள்.

அம்பிகையின் திருவடியைச் சரணமென்று பற்றிக் கொண்ட அபிராமிபட்டர் முதல் பாட்டில் அப்பெருமாட்டியின் சமுதாயசோபையை, 'குங்குமதோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே’’ என்று சொல்விப் புகுந்தவர், பிறகு திருக்கரங்களை, 'பனி மலர் பூங்கணையும் கருப்பஞ் சிலையும்மென் பாசாங்குசமும் கையில் அணையும்' என்று பாடி அப்பால் சேவடியைப் பற்றினார் ; செறிந்தேன் உனது திருவடிக்கே’’ என்று பாடினார். திருவடியைத் தொட்ட பிறகு அதனை விட்டு அகல மனம் வரவில்லை. அதன் நிழலில் வெம்மையை ஆற்றிக்கொள்ள இன்னும் சிறிது நேரம் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.