பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                      முக்கரண வழிபாடு


அம்பிகையின் திருவடியைச் சென்னியிலே ன்வத்து மகிழ்ந்த அபிராமிபட்டர், திரிகரணங்களாலும் அவளை வணங்கி வழிபட்டு வாழும் இயல்புடையவர். அன்னையின் திருவடிகளைத் தலைக்கு அணியாகச் சூடுவதோடு, அவள் மந்திரத்தைத் தியானிப்பதும், அவளுடைய 'ஆகமங்களை வாயாரச் சொல்லிப் பாராயணம் செய்வதும் அவருடைய வழிபாட்டு முறைகளாக இருந்தன. அவற்றை ஆறாவது பாட்டில் சொல்கிறார்.

முன் பாட்டில், "அந்தரி பாதம் என் சென்னியதே" என்று படர்க்கையிலே வைத்துச் சொன்னவர், இந்தப் பாட்டில் அம்பிகையை முன்னிலைப்படுத்திச் சொல்கிறார்.

                சிந்துர வண்ணப் பெண்ணே!


என்று விளிக்கிறார்.

அம்பிகையாகிய திரிபுரசுந்தரி செக்கச் சிவந்த திரு மேனியுடையவள். அந்தத் திருமேனியின் சமுதாய சோபையை முதல் பாட்டிலே, "உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்" என்று பாராட்டித் துதிக்க, தொடங்கினவர் அல்லவா? பிராட்டியின் பிரசாதப் பொருளாகிய குங்குமத்தைக் காணும் போதெல்லாம் அவளுடைய திருமேனியை நினைத்து உருகுவது பக்தர்களுக்கு இயல்பு. "சிந்துர வண்ணத்தினாள்"(8),"சிந்துர மேனியள்"(53) என்று பின்னும் இவ்வாசிரியர் கூறுகிறார்.ஸ்ரீவித்யா உபாசகராகிய இவர் தம்முடைய தியானத்தில் திரிபுர சுந்தரியை நினைப்பவர். ஆதலின் அவளுடைய, செவ் வண்ணத் திருமேனியையே அடிக்கடி நினைவு கூர்வார்.

எழில்.-5