பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்கோலக் காட்சி

அம்பிகையின் மலர்த்தாளைக் கருத்தில் வைத்துத்தொழுத ஆசிரியர் அப் பெருமாட்டியின் திருக்கோலம் முழுவதையும் தரிசனம் செய்ய ஆசைப்படுகிறார், அம்மையிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார். 'உன்னுடைய மேனி முழுவதும் ஒருங்கே தரிசிக்க நீ அருள் புரிய வேண்டும்' என்று வேண்டிக் கொள்ளும்போது, இன்ன இன்ன அங்கங்களால் பொலிவுற்றவள் அம்மை என்பதை நினைக்கிறார்.

அபிராமியை அம்மே” என்று அணுகும் குழந்தையாக நிற்கிறார், இப்போது இவ்வாசிரியர். குழந்தைக்குத் தாயின் தனத்திலேயே கண் இருக்கும். தன் பசியைத் தீர்த்து வளர்க்கும் இடமல்லவா? இந்தக் குழந்தையும் தன் அம்மையை அடையாளம் சுட்டிச் சொல்லும் பொழுது அவளுடைய தாய்மையிலே மனம் ஈடுபட்டு, அவளுடைய திருத்தன பாரங்களைப்பற்றி முதலில் சொல்கிறது. ஆனாலும் இந்தக் குழந்தை அறிவுள்ள குழந்தை. ஆதலின் அந்த அருள்மயமான அங்கத்தைப் பற்றி விரிவாகவே சொல்கிறது.

அம்பிகையின் தனபாரத்திலே கண்ணும் கருத்தும் உடையவன் சிவபெருமான். காமேச்வர ப்ரேமரத்ன மணி ப்ரதிபணஸ்தனி என்று லலிதா சகசிரநாமம் கூறுகிறது. காமேசுவரனுடைய காதலாகிய மணிக்கு எதிரே வழங்கும் மணிகளாம் அம்மையின் நகில்கள். நம்முடைய தந்தையாகிய சிவபிரான். காதல் மேன்மேலும் மிகுதியாகி எம்பெருமாட்டியின் தனபாரத்தைத் தன் கருத்