பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

கோயில் வாசலில் வரிசையாக வைத்து தீபம் காட்டினார். பிறகு நாகராசனை வரவழைப்பதற்காக சில மந்திரங்களை முனுமுனுத்தார். நாகப்பாம்பு வந்தது. குடம் குடமாக நகர்ந்து சென்று பாலை வயிறு முட்டக் குடித்தது. உடைத்து வைத்திருந்த கோழி முட்டைகளையும் உறிஞ்சிக் குடித்தது. ஆனந்தம் பொங்கப் படமெடுத்து ஆடியது. அப்பொழுது அதன் தலையின் மீது கணிரென்று ஒரு நுங்கு வந்து விழுந்தது. தொடர்ந்து தட தடவென்று நுங்குகள் பாய்ந்து வந்தன.பக்தியோடு நாகராசனைப் பார்த்துக் கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் தலை தப்பினால் போதும் என்று ஓடிவிட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து பூசாரிப் பார்ப்பனரும் ஓடிவிட்டார்.

முப்பது குரங்குகள் பனைமரங்களின் உச்சியில் இருந்து பறித்துப் போட்ட நுங்குகள் பாம்பின் தலையிலும், அதன் உடம்பின் பல பகுதிகளிலும் சட சட வென்று கனமாக வந்து விழுந்ததால் அது அந்த இடத்திலேயே நசுங்கிச் செத்தது.

அது செத்து விட்டதைக் கண்ட முயல் புதர் மறைவிலிருந்து துள்ளிக் குதித்து வெளியில் வந்தது. பனைமரத்திலிருந்து குரங்குகள் அனைத்தும் இறங்கி வந்தன. செத்த பாம்பின் உடலைத் தூக்கி வீசிக் கொண்டு அவை காட்டுக்குள் சென்றன. எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் தங்கள் பொதுப் பகைவனான நாகப்பாம்பு இறந்த செய்தியை அறிவித்தன.

குரங்குகளையும், முயலையும் காட்டு மிருகங்கள் அனைத்தும் வாழ்த்தின.அந்த நாள் தொட்டுவழிப்போக்கர்கள் அந்தக் காட்டில் பயமின்றி நடந்துசென்றனர்.