பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அச்சம் இல்லை 7



வலிமையை உடையவன் மெலிவுடையவர்களுக்கு அஞ்சுவதில்லை. ஆனால் இத்தனை பேர்களும் மரணத்துக்கு அஞ்சுவார்கள்.

“சாதலின் இன்னாத தில்லை’

என்பது வள்ளுவர் வாக்கு.

அந்த மரணத்தையும் வெல்லும் ஆற்றலை மனிதன் பெறலாம். அதற்குரிய உபாயத்தை அறிந்து செயல் செய்தால் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறலாம்.

இந்த உடம்போடே என்றும் வாழ்வது மரணம் இலாப் பெருவாழ்வு ஆகாது. இனிப் பிறந்து இறந்து வாழ்வதை எவன் போக்கிக் கொள்கிறானோ அவனே மரணம் இலாப் பெரு வாழ்வை அடைகிரறான். அத்தகையவன் இந்த உடம்பை விட்ட பிறகு இனி என்றும் பிறவாத மேல்நிலையை அடைகிறான். மற்றவர்களே மீண்டும் பிறக்கிறார்கள்; ' பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றார்கள்.”

மரணபயம் இல்லாமல் வாழ முடியுமா ?

'மரணப்ர மாதம் நமக்கு இல்லையாம்'

என்பது அருணகிரியார் திருவாக்கு. உடம்பைப் பெற்றவன் மரணம் அடைவது இயற்கை. அவ்வாறு இந்த உடம்பை நீத்து மரணம் அடைந்த உயிர் இனிப் பிறவாத தன்மையை எய்தினால் மரணமிலாப் பெரு வாழ்வில் என்றும் நிலைத்து நின்று இன்பம் அடைகிறது.

அவ்வாறுள்ள நிலைமையை அடைந்தவர்கள் மரணத்துக்கு அஞ்சுவதில்லை.

"சந்ததமும் வேதமொழி யாதொன்று
பற்றினது தான்வந்து முற்று மெனலால்
சகமீ திருந்தாலும் மரணம்உண் டென்பதைச்
சதாநிஷ்டர் நினைவ தில்லை'

என்று தாயுமானவர் சொல்கிருர். மரணத்திற்கே அஞ்சாதவர்கள் வேறு எதற்கு அஞ்சுவார்கள்?