பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 அப்பர் தேவார அமுது


மாறி யாவும் அவனுடைய தொடர்பினால் அவன் மயமாக, நின்று இன்ப வாழ்க்கையைப் பெறத் துணையாக நிற்கும். பிறரைப் பலவிதமாக அலைத்துத் துன்புறுத்தும் பேயை வசப் படுத்திவிட்டால், பிறகு அது நாம் இட்ட ஏவல்களை யெல்லாம் செய்யும் என்று சொல்வார்கள். அவ்வாறு உடம்பாலும் உள்ளத்தாலும் இறைவனை வழிபடும் அன்பர்களுக்கு, முன்பு உலகியலில் அவர்களை ஈர்த்து அலைத்த பொறிகளும் மனமும் அடங்கி அவர் ஏவல் வழி நிற்கும். ஆரூர் அமர்ந்த அம்மான் இத்தகைய அற்புதத்தை அடியார்களிடம் நிகழும்படி செய்ய வல்லவன். இவற்றையெல்லாம் எண்ணி இன்புறும்படி பாடுகிறார் திருநாவுக்கரசர்.

தொழற்குஅங்கை துன்னிநின் றார்க்குத்
தோன்றி அருளவல் லானும்
கழற்குஅங்கை பன்மலர் கொண்டு
காதல் கனற்றநின் றானும்
குழற்கங்கை யாளை உள் வைத்துக்
கோலச் சடைக்கரந் தானும்
அழற்குஅங்கை ஏந்தவல் லானும்
ஆரூர் அமர்ந்தஅம் மானே.


  • திருவாரூரில் எழுந்தருளிய தலைவனாகிய சிவபெருமான், தொழும்பொருட்டுத் தம் அழகிய கைகளை இணைத்து நின்று அன்பு செய்ய வல்லவர்களுக்குத் தன் தோற்றத்தைக் காட்டி அருளவல்லவனும், தன் திருவடியை அருச்சிக்கும் பொருட்டு வடிவாலும் வண்ணத்தாலும் நறுமணத்தாலும் பல வகையாக உள்ள மலர்களைக் கையிற் கொண்டு, உள்ளத்திலே இடையறாத பக்திக்கனல் பிற மாசுகளை எரித்து நின்று கொழுந்துவிட, நிற்பவர்களின்முன் கோலம் காட்டி நின்றவனும், தன் அழகிய சடாபாரத்தில் கூந்தலையுடைய கங்காதேவியை உள்ளே வைத்து மறைத்திருப்பவனும், கனலைத் தன் அழகிய உள்ளங்கையில் ஏந்த வல்லவனும் ஆவான்." -