பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அப்பர் தேவார அமுது


அவனுடைய வடிவங்கள் பல, உறுப்புகள் பல என்று சொல்லிவிட்டால் எல்லாம் அடங்கிவிடும். இத்தனை என்ற வரையறை தெரியாதபோது பல என்று சொல்வதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது.

ஆயிரம் என்று சில சமயங்களில் சொல்கிருேம். அது வரையறையாக ஆயிரம் என்ற எண்ணைக் குறிப்பதல்ல, பலபல என்ற பொருளையே தரும். ஆயிரம் வகையில் பிழைக்கலாம்’ என்ருல் ஏதோ கணக்கெடுத்துத் திட்டமாக ஆயிரம் என்ற எண்ணுக்குள் அடக்கிச் சொல்வதாகக் கொள்ளக்கூடாது. பல பல வகை என்பதையே ஆயிரம்வகை என்று சொல்வது வழக்கில் இருக்கிறது.

இறைவனுக்கு எத்தனை திருவடிகள்? ஒன்று என்றும் பலவென்றும் சொல்லலாம். பலவென்பதே பொருந்தும். பல என்பதையே ஆயிரம் என்று சொல்வது வழக்கு என்று பார்த்தோம். அந்த வகையில் அப்பர் சுவாமிகள் இறைவனை வரு கணிக்கப் புகுகிறார்.

அவனுக்குப் பல பல திருவடிகள் உண்டு, அவை யாவும் தாமரை போலச் சிவந்து தண்மையை உடையனவாய் விரிந்து நிற்கும்.

ஆயிரம்தாமரை போலும்
        ஆயிரம் சேவடி யானும்.

இறைவனுடைய வடிவத்தை நினைக்கப் புகுந்த மெய்யன்பர்களுக்கு அவனுடைய திருவடி நினைவே முதலில் தோன்றும். அவனுடைய அருட்பெருவடிவம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தன் அன்பர்களுக்குத் திருவருள் பாலிக்க அவன் திரு வடியை நிலம் பதித்து நடந்து வருகிறான்; அதை எளிதில் அன்பர்கள் பற்றிக் கொள்ளும்படி காட்சி அளிக்கிறான். ஆகவே இறைவன் வடிவத்தைச் சொல்லப் புகுந்த அப்பர் சுவாமிகள் அவனுடைய திருவடிகளையே முதலில் நினைக்கிறார்.

ஆயிரம் தாமரை போலும்
        ஆயிரம் சேவடியானும் .