பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. எம்பெருமான் அழகைக் கண்ட பெண்

ந்தப் பெண் ஒருநாள் திருக்கழிப்பாலை என்ற தலத்துக்குச் சென்றாள். அங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானத் தரிசித்தாள். ஒரு முறை கண்டதோடு நிற்கவில்லை; பன்முறை யும் கண்டு கண்டு அவனுடைய திருவுருவத்தைக் கண் வழியே வாங்கித் தன் காதல் உள்ளத்தில் புதைத்துக்கொண்டாள். இப்போது அவள் தன் கண்களை மூடினால் அவள் உளக் கண்ணில் சிவபெருமானுடைய எழில் உருவம் நிற்கிறது.

அவள் ஊர் வந்து சேர்ந்தாள். அதுவரையில் பெண்களுக்குரிய இயல்பின்படி எதை எதையோ பேசிக்கொண்டிருந்தாள்; இப்போது அவள் பேச்சே அடியோடு மாறிவிட்டது. எப்போதும் சிவபெருமானைப் பற்றியே பேசினாள், எதைக் கண்டாலும் அவளுக்கு அவனுடைய நினைவே எழுந்தது.

அவள் தன் முன்னை நிலையினின்றும் மாறுபட்டிருப்பதை அவள் தாய் பார்த்தாள். எப்போதும் அவள் கழிப்பாலைப் பெருமானைப் பற்றிப் பேசுவதையே கேட்டாள்.

"உன் மகள் என்ன, ஒரு விதமாக இருக்கிறாள்? மற்றப் பெண்களைப் போல அவள் பேசவில்லையே! என்ன காரணம்?" என்று அயல் வீட்டுக்காரி அந்தத் தாயிடம் கேட்டாள்.

"நானுந்தான் கவனிக்கிறேன்.அவள் பேச்செல்லாம் மாறி விட்டது. அவள் தன்னுடைய அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து பேசினல் கிளி கொஞ்சும். இப்போதும் அந்த இனிமைக்குக் குறைவில்லை. ஆனல் பேச்செல்லாம் கழிப்பாலைப் பெருமானைப் பற்றியே பேசுகிறாள்.

"அவன் 'வானவர்களுக்கெல்லாம் தன் வாழ்வைத் தானம் செய்கிறவனே' என்று சொன்னதை நான் கேட்டேன். இந்த