பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 அப்பர் தேவார அமுது:

அவன் ஆடும்போது அவன் அணிந்துள்ள ஆபரணமாகிய பாம்புகள் ஆடுகின்றன. அவனுடைய சடைகள் தொங்கி ஆடுகின்றன. தன் கையில் அனலை ஏந்திக்கொண்டு அவன் ஆடுகிறான். எல்லாவற்றையும் தூய்மைப்படுத்துவது அனல். அதனை அவன் கையில் வைத்திருக்கிருன். அதனோடு அவன் ஆடுகிறான்.

அரவு ஆடச் சடை தாழ

  அங்கையினில் அனல் ஏந்தி 

இரவு ஆடும் பெருமானை.

இரவில் அவன் ஆடும்போது அவன் கையில் அனல் சுடர்விடுகிறது. ஆதலின் அந்த நள்ளிருளிலும் அவன் ஆடுவது நன்ருகத் தெரிகிறது. "நள்ளிருளில் நட்டம் பயின்ருடும் நாதனே" என்பது திருவாசகம்.

இரவிலே அனல் ஏந்தி ஆடும் பெருமானை அப்பர் சுவாமிகள் தம் உள்ளத்தே வைத்துக்கொண்டாராம். நம்முடைய மனத்தில் இருள் செறிந்து கிடக்கிறது; அறியாமை என்னும் இருள் அடர்ந்திருக்கிறது. இருள் செறிந்த இடத்தில் எந்தப் பொருளும் தெரியாது. அறியாமை இருள் செறிந்த நம் மனத்திற்கு மெய்ப்பொருள் இன்னதென்று தெரியாது. அங்கே ஒளி புகுந்தால்தான் பொருளின் நிலை கண்டு தெளிவு பிறக்கும்.

அப்பர் சுவாமிகள் இரவில் அனல் ஏந்தி ஆடும்பெருமானைத் தம் மனத்தில் வைத்துக் கொண்டார். மற்றவர் மனத்தில் சிறைப்பட்டுக் கிடப்பவனைப் போல் உள்ள பெருமான் அன்பர்கள் உள்ளத்தில் தனக்கு வாய்ப்பான இடம் கிடைத்ததே என்று மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடுகிறான், அவன் அனலேந்தி ஆடுவதனால் அவ்விடத்தில் இருள் இருப்பதில்லை. குப்பைகள் எரிந்து சாம்பலாகி விடுகின்றன. குப்பைத் தொட்டியில் நெருப்பைப் போட்டால் அது குப்பையை எரித்து விட்டுச் சுடர்விடும். நாமோ குப்பைத் தொட்டியில் மேலும் குப்பைகளைக் கொட்டுகிறோம். அப்பர் சுவாமிகளைப் போன்றவர்களோ அனலேந்தும் பெருமானை