பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் இவர்க்கு இயல்போ?37


நெற்றி இருக்கட்டும். அவர் கழுத்தைப் பார்க்கலாம். நவமணி மாலைகளையும் முத்துமாலைகளையும் கழுத்தில் அணியும் செல்வர்களைப் பார்த்திருக்கிறோம். அவரோ நஞ்சைக் கழுத்தில் வைத்திருக்கிறார். கடலிலே முத்தும் பவளமும் தோன்றுகின்றனவே; அவற்றை அணியக் கூடாது? அந்த நஞ்சைக் கண்டாலே பயமாக இருக்கிறது. அதன் ஒளியே வெப்பத்தைத் தருகிறது; காயும் கதிரை வீசுகிறது. அதுவும் கடலில் தோன்றியதுதான். இதுதானா அவருக்கு அங்கே கிடைத்தது?

காய் கதிர் வேலை நீல ஒளிமா மிடற்றர்.

அதுதான் போகட்டும். செல்வர்கள் பெரிய மாளிகைகளைக் கட்டிக் கொண்டு வாழ்வார்கள், அவர் நினைத்தால் ஒரு பெரிய அரண்மனையையே கட்டிக் கொள்ளலாம்.ஆனால் அவர் எங்கே வாழ்கிறார்? பிணங்களை சுட்டுக் கரியாக்கும் சுடுகாட்டில் வாழ்கிறார்.

கரிகாடர்.

இரண்டு கால்களிலும் நல்ல சிலம்புகளை அணிந்து அழகாக நடனமிடலாம். அவர் ஒரு காலில் வீரக்கழலைக் கட்டிக் கொண்டு இருக்கிறார். அவர் பல வீரச்செயல்களைப் புரிந்தவராம். அந்தச் செயல்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது. அவருடன் மூங்கிலைப் போன்ற அழகிய தோளையுடைய உமாதேவி இருக்கிறாள், அவள் எப்படித்தான் அவருடன் காலம் கடத்துகிறாளோ தெரியவில்லை. ஒரு சமயம் கஜாசுரன் என்பவன் யானை உருவத்தில் வந்தான். அவனை அழிக்க புகுந்தார். பக்கத்தில் அந்த மெல்லியல் இருக்கிறாளே, அவள் அஞ்சுவாள். ஆகையால் அவளை அந்தப்புரத்தில் வைத்து விட்டு அந்த யானையை அழித்திருக்கலாமே! அவர் என்ன செய்தார் தெரியுமா? அந்தத் தேவி பார்த்து அஞ்சும்படி அவள் பக்கத்தில் இருக்கும்பொழுதே தம் கையிலுள்ள மழுவை வீசி அந்த யானையைக் கொன்றார். அதோடு நின்றாரா!
தே-3தே-3