பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் தாம் தமிழில் எழுதுவதாகவே கூறினர். 7ஆம் நூற்றாண்டில் பழைய மலையாள கிறித்தவர் தம் மொழியைத் தமிழ் என்று கூறியதுடன் தமிழில் எழுதி முதன்முதலாகத் தமிழ் நூல்களை அச்சிடவும் செய்தனர்! முதல் தமிழ் 'அகராதி' மலபார் மொழி அகராதி என்ற பெயருடனேயே அச்சிடப் பட்டுள்ளது.‘உயர்குலத் தமிழர்' தங்கள் மொழியை வேறுபடுத்தி விட்டபின்னும் (இழிந்தவராகக் குறிக்கப்பட்ட) பழந்தமிழ்க் குடியினர் தமிழராகவே இருந்தனர். இன்றும் இருந்து வருகின்றனர். இவர்கள் ‘மக்கள் வழி' (Faternal Inheritance) உடையவர்கள்.

‘தீண்டப்படாத' மக்கள் எல்லா நாடுகளிலும் இன்றும் தம்மை ஆதித் திராவிடர், ஆதிக் கேரளர், ஆதி ஆந்திரர் என்றே கூறுகின்றனர்.

12ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டினுள்ளேயே பாண்டித் தமிழ், சோழத் தமிழ் என்ற வேறுபாடு தலைகாட்டிற்று. இரண்டுக்கும் வெவ்வேறு எழுத்துகள் கூட ஏற்பட்டன. இன்றைய தமிழ் எழுத்து சோழ எழுத்தேயாகும். இது சேர எழுத்து எனவும் கூறப்பட்டது. ஆனால், பழைய பாண்டி எழுத்தான வட்டெழுத்து பாண்டி நாட்டில்தான் இன்று மறைந்துவிட்டது. வடமலையாளத்திலும் தென் கன்னடம், குடகு ஆகிய இடங்களிலும் அது இன்றும் 'கோல் எழுத்து' என்ற பெயருடன் வழங்குகிறது. 'யார் செய்த நல் வினையோ' இன்று பழந்தமிழ் எழுத்து மாறுபட்டு விட்டாலும், தமிழ் மொழியானது பாண்டி, சோழம் என இரு மொழிகளாகிவிடாமல் ஒரு மொழியாகவே இருந்து வருகிறது.

கடைசியாக, பழந்தமிழ் எல்லை இன்றைய தமிழ்நாடும் மலையாள நாடும் அதற்குச் சற்று அப்பாலும் இப்பாலும் மட்டுமன்று. நெடுந்தொலை பரவியிருந்த தென்பது தமிழ் நூல்களாலேயே விளக்கப்படக் கூடும். ஆயினும் பகுத்தறிவு, ஆராய்ச்சிக்கண் அப்பக்கம் இன்னும் நாடாததால் விளக்கம் பெறாதிருந்து வருகிறது.

இவ்வகையில் புலவர்கட்குப் பெருந்தடையாய் இருந்து வருவது 'தமிழ்' என்பது சொல்லின் பலகால மாறுபட்ட வழக்கெல்லையே யாகும்.