பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதலில் 'தமிழ்' என்பது தென்னாட்டில் வழங்கப்பட்ட மூலத் திராவிட மொழியின் பெயராக இருந்தது. இது முத்தமிழ் (முன்னையதமிழ் அல்லது மூன்று தமிழ்) எனப் பிற்காலத்தில் வழங்கப்பட்டது. இன்று இதனையே நாம் திராவிடம் என்று குறிக்கிறோம்.

இதன் வகை பேதங்கள் கொடுந்தமிழ்கள் என்றும் இதன் திருந்திய இலக்கிய வடிவம் செந்தமிழ் என்றும் வழங்கப்பட்டது. சங்க காலத்தில் மங்களூருக்கும் வேங்கடத்துக்கும் தெற்கிலுள்ள தீவக்குறை முழுவதும் செந் தமிழ் நாடாகவும், அதன் வடக்கு கொடுந்தமிழ் நாடாகவும் இருந்தது. மேற்கிலுள்ள மொழி குடகு (குடக்கு - மேற்கு) எனப்பட்டதுபோல், வடக்கு மொழி வடுகு எனப்பட்டது. கன்னடமும் தெலுங்கும் உண்மையில் 10ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய ஒரே எழுத்துடைய ஒரே கொடுந் தமிழ் மொழியாயிருந்து, பின் இரண்டாகப் பிரிந்தவையே.

தேவாரக் காலத்துக்குள் (7ஆம் நூற்றாண்டுக்குள்) செந்தமிழ்நாடு பின்னும் குறுகிற்று. சில காலம் அது பாண்டி நாடாகவும், சில காலம் வடபாண்டி, தென்சோழ நாடுகளாகவும் கொள்ளப்பட்டது. பெரிய புராணத்தில் சோழ நாட்டிலிருந்து பாண்டிநாடு செல்லும் சம்பந்தர் தென்னாடு அல்லது தமிழ் நாட்டுக்குப் போவதாகவே கூறுகிறார். இவ்விடத்தில் தமிழ்நாடு என்பது செந்தமிழ்நாடு என்ற பொருளிலேயே வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

தொல்காப்பியர் கூறிய தமிழ்நாட்டெல்லை உண்மையில் செந்தமிழ் நாட்டெல்லையேயன்றி செந்தமிழ், கொடுந்தமிழ் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய முழுத்தமிழ் (திராவிட) நாட்டெல்லையன்று. ஏனெனில் அவர் தெற்கெல்லையாகக் கூறிய குமரி, குமரிமுனையோ கடலோ அன்று. குமரியாறுதான் என்று குறித்தனர் உரையாசிரியர்கள். அதன் தெற்கிலிருந்த பஃறுளியாறு, குமரி நாடுகள் ஆகியவை தமிழ்ப் பெருநாடாகவேயிருந்தாலும், செந்தமிழ்நாடு அல்லவாதலால் அவை விலக்கப்பட்டன என்று தோன்றுகிறது. தெற்கெல்லை, செந்தமிழ் நாட்டெல்லை எனவே, வடக்கெல்லையும் அதுவே யாதல் தெளிவு. “வடவேங்கடம் தென் குமரியாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து" என்ற தொல்காப்பியத் தொடர் இவ்-