3. நாட்டுக் கல்வியும் - தாய்மொழியும்
அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் எல்லாவற்றையுமே பொதுப்படக் கல்வி என்று கூறலாம். ஆயினும், பள்ளிகளின் வாயிலாகக் கிடைக்கும் வாய்ப்பு ஒன்றை மட்டுமே சிறப்பாகக் கல்வி என்று கூறுகிறோம். இதற்கும் காரணம் இது ஒன்றே செயற்கை முறையான வாய்ப்பு. திட்டப்படுத்தி வளர்ச்சி உண்டு பண்ணுவது பள்ளிக் கல்வியில் மட்டுமே எளிது.
பள்ளியறிவுக்கு முன்னும் பின்னும் உள்ள அறிவு வளர்ச்சியை இயற்கை யறிவு வளர்ச்சி அல்லது இயற்கைக் கல்வி என்னலாம். பள்ளிக்கு முற்பட்ட இயற்கைக் கல்வியும், பள்ளி அல்லது கல்லூரிக்குப் பிற்பட்ட இயற்கைக் கல்வியும், குடும்ப, சமூக வாழ்க்கையினிடையே ஏற்படும் கல்வியாதலால், இரண்டும் வாழ்க்கை மொழியாகிய தாய்மொழியிலன்றி வேறெதிலும் நடைபெற முடியாது என்பது தெளிவு. முதற்படியும் இறுதிப்படியும் ஆன இவ்விரண்டுடன் ஒத்து, அவற்றை இணைக்கத்தக்கதான பள்ளிக் கல்வி அவற்றைப்போல் தாய்மொழி மூலமான கல்வியாயிருந்தாலல்லாமல், அது நாட்டுக் கல்வியாயும் இராது என்று கூறத் தேவையில்லை.
பிறமொழி, தாய்மொழியைவிட மிகச் சிறந்ததாய் அமையக்கூடும் இடங்களில் கூட, பிற மொழிக் கல்வியினால் வீண்கால அழிவு ஏற்படுகிற தென்பதில் ஐயமில்லை. ஏனெனில் தாய்மொழி மூலம் ஓர் ஆண்டில் கற்கப்படும் கல்வியைப் பிறமொழி மூலம் மூன்றாண்டுகளில் கூடக் கற்கமுடியாது. அதோடு கற்ற அளவிலும் அது தாய்மொழி போலச் செரித்து அறிவுணவாய் மேலும் வளர்ச்சிக் குரியதாகாமல், தாளால் புனையப்பட்ட செடிகொடி போல் செயலற்றதாகவே இருக்கும். நம் தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஒன்று நீங்கலாக எந்தப் பிற மொழியும் தாய் மொழியைவிட எத்துறையிலும் சிறப்புடைய-