தன்றாதலால், பிறமொழிக் கல்வி பயனற்றது மட்டுமன்று; தீமை தருவதும் ஆகும் என்று கூறத் தேவையில்லை.
பள்ளிக்கு முற்பட்ட கல்வி
பள்ளிக்கு முற்பட்ட கல்வியிலும் மூன்று படிகள் உண்டு. முதற்படி இயற்கையாய் ஏற்படுவது. உயிர்கள் வளர்ச்சிப் படியில் (Evolution) பல ஊழிகளாக அடைந்த முன்னேற்றம் முழுவதும் மரபுரிமை (பரம்பரை)யாகக் குழந்தைக்கு இயற்கையாகவே சில மாதங்களில் வந்துவிடுகிறது. பசித்தபோது அழுதல், பால் குடித்தல், குடித்த பால் செரிக்கும் வகையில் கை கால்களை ஆட்டி விளையாடுதல் ஆகியவை இத்தகையன. கண்ட பொருள்களைப் பிடித்தல், வாயில் வைத்துச் சுவைபார்த்தல், கூர்ந்து நோக்குதல் முதலியவை உடல் வளர்ச்சிக்கும் பொருள்கள் பற்றிய இயற்கையறிவு வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
இரண்டாவது படி தாயின் தொடர்பால் ஏற்படுவதாகும். தாயின் செயலில்லாவிட்டால் விலங்கு நிலையில் கீழ்ப்படியிலேயே குழந்தை இருக்க வேண்டிவரும். உணவு நாடும் குழந்தைக்குத் தக்க உணவைத் தாய் கால வாய்ப்பறிந்து உதவுவது போலவே, அறியும் விருப்பம் மட்டும் உடைய குழந்தைக்கு விரைவில் அறிவு வளர்ச்சி ஏற்படத் தாய் உதவுகிறாள், தாயுடன் குடும்பமும் உதவுகிறது.
குடும்பத்துக்குக் குடும்பம் குழந்தைகள் அறிவு வளர்ச்சி வேறு படுவதற்குத் தாயின் அறிவு நிலை, குடும்ப நிலை, இரண்டிடத்தும் உள்ள கல்வி, பண்பாடு ஆகியவையே காரணம் ஆகும். தாயின் அறிவு குறைவுற்ற சமூகங்களிலும், குடும்ப வாழ்க்கைத்தரம் தாழ்வுற்றிருக்கும் சமூகங்களிலும் குழந்தைகள் பிற்காலத்தில அறிவு குன்றியிருப்பதற்கு இதுவே காரணம்.
இயற்கைக் கல்வியின் மூன்றாவது படி பிற குழந்தைகள் கூட்டுற வினாலேயே ஏற்படும் அறிவு ஆகும். ஒரு சில ஆண்டு வளர்ச்சி பெற்ற குழந்தை தாய் உறவினும் தன்னொத்த குழந்தைகள், சில சமயம் தனக்கு மூத்த அல்லது இளைய குழந்தைகள் (பாப்பாக்கள்) கூட்டுறவை நாடுவது காணலாம். ஆகவே, குடும்பத்தினுள்ளும், சூழ்ந்துள்ள குடும்பத்திலும் உள்ள குழந்தைகளின் அறிவு நிலையே இந்தப் படியில் குழந்தையின் வளர்ச்சி வேகமாகிறது.