பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம் நாட்டில் தாயின் அறிவு குடும்பத்தின் அறிவாகவும், குடும்பத்தின் அறிவு நிலை, சாதி, சமூகம், இனம் ஆகியவற்றின் அறிவு நிலையாகவும் இருப்பதால்தான் குழந்தையின் அறிவும் நாட்டின் அறிவும் பெரிதும் பெரும்பான்மை இனத்தின் அறிவுநிலையாய்விடுகிறது. நாட்டின் அறிவை வளர்ப்பவர்கள் இப்பெரும்பான்மை இனத்தையும், அதனைச் சார்ந்த பிற்பட்ட சாதி சமூகங்களையும் தனிப்படத் திருத்த முற்பட்டாலல்லாமல், குழந்தை வளர்ச்சியும் நாட்டு வளர்ச்சியும் தடைப்பட்டே இருக்கும்.

பள்ளிக்குப் பிற்பட்ட கல்வி

பள்ளிக்குப் பிற்பட்ட கல்வியும் முற்பட்ட கல்வியைப் போலவே சமூக, இனப் பண்பாட்டினளவில் நிற்க வேண்டியதாகிறது. அத்தோடு மற்றும் இருவகைகளிலும் பள்ளிக்குப் பிற்பட்ட கல்வி இனவளர்ச்சியின் அடிப்படையைத் தழுவியதாகிறது. பள்ளிக்கு முற்பட்ட கல்வியைவிடப் பள்ளிக்குப் பிற்பட்ட கல்வியில் வாழ்க்கைத் தரம், வாழ்க்கைப் பொருளாதார வசதிகள், நல்ல மணவாழ்வு, சமூக அறிவுநிலை ஆகியவை மிகுந்த இடத்தைப் பெறுகின்றன. வாழ்க்கை மொழி யாகிய தாய் மொழியின் நிலை, தாய்மொழிக் கல்வி ஆகியவை வாழ்க்கையையும் வளர்ச்சியையும் பாதிக்கும் பருவமும் இதுவே.

பள்ளிக் கல்வி

நம் நாட்டில் இன்று பள்ளிக் கல்வி மூன்று படிகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை தொடக்கக் கல்வி (1-5 வகுப்பு அல்லது 1-8 வகுப்பு) இடைநிலைக் கல்வி, உயர்கல்வி (கல்லூரிக் கல்வி) என்பவை. தொடக்கக் கல்வி உண்மையில் இயற்கைக் கல்வியின் பிற்பட்ட படிகளான குடும்ப, சமூகக் கல்விக்குத் துணைதரும் கல்வியேயாகும். இதுமட்டுமே எல்லா மனிதர்களுக்கும் உரியதெனக் கொள்ளப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் எல்லா மனிதர்க்கும் உரிய இம் மனிதத்தன்மை மிகவும் குறுகியிருக்கிறது.

(அ) ஆண்களுக்கு அறிவு உரிமை, 'பெண்களுக்கு அடிமை உரிமைதான்' என்று இந்நாட்டில் கருதப்பட்டுவருகிறது.