பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மைநிலையும் அப்படித்தான் இருந்துவருகிறது. உயர்வகுப்புகளில்கூடப் பெண்கள் தாழ்ந்த வகுப்பினராகவே உள்ளனர் என்பது மறக்கத் தக்கதன்று. மேல் நாடுகளில் பெண்களுக்குக் கல்வி உரிமை இருந்தும்கூட வாழ்க்கையில் உள்ள அடிமைப் பண்பு அறிவுத்துறையில் அவர்களை முற்றிலும் விட்ட பாடில்லை என்று காணலாம். அப்படியிருக்க, பெண்களுக்கு உரிமையும் வசதியும் அளிக்கப்படாத இந்நாட்டில், பெரும்பாலான பெண்கள் சமூகத்திலும் பிற்பட்டு, பெண்கள் என்ற நிலையிலும் பிற்பட்ட இரட்டிப்பு அடிமை நிலையிலுள்ளார்கள். ஆதலால், இங்குப் பெண்கள் பிற்பட்டிருப்பதில் வியப்பில்லை.

(ஆ) வாழ்க்கையில் பிற்பட்ட இனத்தவர்கள் செல்வநிலையிலும் பிற்பட்டுத் தொடக்கக் கல்விகூடப் பெறாததால், முற்பட்ட ஓரிரு வகுப்புகளும் முற்பட்ட இனமும் மட்டுமே அனைவர்க்கும் உரிய கல்வியை அடைந்து வருகிறது. வரிகொடுக்கும் இனம் பிற்பட்ட இனமாகவும், கல்வி கற்கும் இனம் பிறிதொரு சிறுபான்மை இனமாகவும் இருக்கும் நாடு நம்நாடு தவிர உலகில் வேறு எங்கும் இருக்காதென்று கூறலாம்.

(இ) செல்வநிலை பிற்படாத இடத்திலும் சமூக இன வாழ்க்கைப் பண்பாடு தொடக்கக் கல்வியைக்கூடப் பாதிக்காதிருக்க வில்லை. ஏழை வீட்டுநோய் செல்வர் வீட்டிலும் பரவுவதுபோல் ஏழையின் அறியாமை அதே சமூகத்தி லுள்ள செல்வர் பண்பாட்டையும் கெடுத்தே வருகிறது.

மூன்று வகைக் கல்விகள்

மேற் குறிப்பிட்ட பொது வசதிக் குறைவு மட்டுமல்லாமல், கல்வி மூவகைப்பட்டிருப்பதனால் வேறு ஒரு பெருங்கேடும் நாட்டு மக்களுக்கு உண்டு. எல்லாருக்கும் உரிய கல்வி தொடக்கக் கல்வி; இடைத்தர வகுப்பார்க்கு இடைக்கல்வி (Secondary Education) உயர் (சோம்பல்) வகுப்பார்க்கு உயர் கல்வி என்றிருக்கும் வகுப்பு முறை ஏழைகளுக்கு உதவாத முறை மட்டுமல்ல, அவர்களைப் பூண்டோடு வளர்ச்சியில்லாது-