அழுத்திவைப்பதும் ஆகும். ஏனெனில் படிப்படியாக மாணவர் சம்பளம் உயர்வது ஒன்றே, ஏழையை அங்கங்கே தடைசெய்யப் போதிய அணையாயிருக்க, அது போதாமல் ஒவ்வொரு படியிலும் ஒருபெரிய தேர்தல் (பரீக்ஷை); ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு தேர்தல்; போதாக் குறைக்குத் தேர்வு (Selection) ஆகியவற்றால்,நாட்டின் செல்வத்துக்குக் காரணமான ஓர் இனம், அரிப்புகள் கொண்டு அரித்துத் தள்ளப்பட்டுச் சுரண்டும் இனம் அதன் செல்வத்தின் உதவியால் தானே செல்வ வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் பெறுகிறது.
இம்மூவகைக் கல்வியிலும் படிப்படியாகப் பிற மொழிகள் புகுத்தப் படுவதும், மிகுதியாக்கப்படுவதும் ஒரு புறம் நாடு அழிய உதவுவதுடன், மறுபுறம் நாட்டு வாழ்வுக்குத் தொடர்பற்ற, நாட்டுச் செல்வத்தை உண்டு பண்ணுவதில் ஈடுபடாத, உழைக்காத ஓர் இனம் வளர மட்டும் உதவுகிறது.
பிற மொழி
பிறமொழிகளுள் தற்கால நூல் முறை அறிவு (Science) தரும் ஆங்கில அறிவுகூடப் பாமர மக்களிடையே தொழிலறிவு, பகுத்தறிவு வளர உதவவில்லை. காரணம் நாட்டுப் பொதுமக்களிடையே எவரும் அதனையடைய வழியே இருப்பதில்லை. படித்தாலும் பிறமொழியறிவு பிறமொழியாளருடன் ஊடாட உதவுமேயன்றித் தாமே சிந்திக்க, தம் இனத்தார், தம் மக்கள் வளர்ச்சிக்கு உழைக்க உதவாது. தவிர அரசியல் உயர்வு, நாகரிக உயர்வுக்குப் பிறமொழிக் கல்வி உதவும் வரை, பிறமொழி அறிவுடையார்க்கே உயர் சம்பளம் என்றிருக்கும் வரை, உயர் குடியினர் எனத் தருக்கி அரசியல் சூதாட்டமாடும் சோம்பல் வகுப்புகள் அன்றி, நாட்டு மக்கள் எவரும் முன்னேற முடியாது.
ஆகவே ‘நாட்டுக்கல்வி’ உண்மையில் ‘நாட்டுக்கல்வி’ 'நாட்டு மக்கள் கல்வி' ஆதல் வேண்டுமானால் அது முழுவதும் தாய்மொழி அடிப்படையில் அமைவது இன்றியமையாதது ஆகும். பிறமொழிக் கல்வி, பிறநாட்டுத் தொடர்பு வேண்டும். அளவு உயர்ந்துவிட்ட இனத்தவர்க்கு, நாட்டுக்கல்விக்கு மேற்பட்ட ஒரு துணையாக முடியுமேயல்லாமல், நாட்டுக் கல்வியின் ஒரு பகுதியாக முடியாது.