4. இலக்கிய உலகில் தமிழன்
இன்றைய உலகம் விரைந்து ஓருலகம் ஆகிக்கொண்டு வருகிறது. ஆனால், நமக்கு அது ஓருலகம் ஆனால் போதாது. அது நம் உலகமும் ஆதல்வேண்டும். அதாவது நாம் அதை ஆக்கும் பொறுப்பிலும் இயக்கும் பொறுப்பிலும் பங்குகொண்டு அதன் மதிப்பு வாய்ந்த ஓர் உறுப்பு ஆதல்வேண்டும்
உலக நாகரிகப் போட்டியில் நாம் முந்திக்கொண்டிந்த காலம் உண்டு. ஆனால், வரவர நாம் பிந்திவிட்டோம். இன்று நாம் கிட்டத்தட்ட கடைசி வரிசையில் கடைசியாகப் பிந்தித்தானிருக்கிறோம். இந்நிலையில் நாம் முன்பு முந்திக் கொண்டிந்தோம் என்பதையே எவரும் நம்பமுடியாமலாகியுள்ளது. நாம் என்றாவது முந்திக்கொண்டிருந்தோம் என்பது உண்மைதானா, உண்மையா யிருக்கமுடிமா என்று இன்று கேட்கப்பட்டால், அதில் வியப்பில்லை. இது உண்மை என்பதுகூட இன்று ஆராய்ந்து முடிவுகட்டக்கூடிய ஒரு செய்தியாகத்தான் இருக்கிறது. இதுபோலவே நாம் பிந்திவிட்டோம் என்பதும் ஆராய்ச்சிக்குரிய செய்தியாகவே உள்ளது. நாம் இன்று பிற்பட்டிருக்கிறோம் என்பதை எவரும் எளிதில் ஒப்புக்கொள்வர். ஆனால், நாம் பிந்திக்கொண்டுதான் வந்திருக்கிறோம், நெடுங்காலமாகப் பிந்திக்கொண்டுதான் வந்திருக்கிறோம் என்பதைப் பலர் எளிதில் உணரமாட்டார்கள். ஏனென்றால், முன்பு முந்திக்கொண்டிருந்தோம் என்பது உண்மையானால் தானே, நாம் இன்றைய நிலைமைவரைப் பிந்திக் கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறமுடியும்? நாம் என்றுமே பிற்பட்டு இருந்து வந்திருக்கலாம் அல்லவா?
நாம் ஒரு காலத்தில் மேம்பாடடைந்திருந்தோம் என்று சிலர் பெருமை பேசி நாள் கழிக்கிறார்கள். உண்மையில் இன்றைய நிலையைப் பார்க்க, இது பெருமைக்குரிய செய்தியன்று;