பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுமைக்குரிய செய்தியேயாகும். வேறு பலர் பழைமையில் கருத்துச் செலுத்தாது புதுமையிலேயே முனைந்து செல்ல விழைகின்றனர். இது சீரிய முயற்சியே. ஆனால், பழைமையின் வேரில்லாத விடத்தில் புதுமை வளம் பெறாது, மலர்ச்சியுறாது, பிற நாடுகளின் புதுமை அவ்வந் நாடுகளின் பழைமையில் பூத்த புதுமலர்ச்சிகளே. பழைமைவெறுத்துப் புதுமையுட் புகுவோர் தம்மையுமறியாமல் தம் பழைமையை அல்லது பண்பைக் கைவிட்டு அயலார் பழைமை அல்லது பண்பையே நாடுபவர்கள் ஆகிறார்கள். ஏனெனில், பிறநாடுகளிலிருந்து அவர்கள் மேற்கொண்டு பின்பற்றும் புதுமை, அந்நாடுகளின் பழைமையில் வந்த புதுமலர்ச்சியே. மேலும் அயல்நாடுகளினிட மிருந்து பின்பற்றும் இப் புதுமை உண்மையில் புதுமலர்ச்சியாகாது: போலிப் புதுமையேயாகும்! பழைமை அல்லது பழம் பண்பிலிருந்து புதுமலர்ச்சி ஏற்படுவது இயல்பே. ஆனால், அயற்பண்பிலிருந்து இப்புதுமை எளிதில் மலர்ச்சியுறாது.

மேனாடுகளில் கிரேக்க உரோம இலக்கியங்களிலிருந்து புதுமலர்ச்சி ஏற்பட்டதே என இக்கூற்றுக்கு எதிர்க் கூற்று எழுப்பப்பெறக் கூடும். கிரேக்க, உரோமப் பண்பாடுகள் வடக்கு மேற்கு அய்ரோப்பாவில் புதுமலர்ச்சி ஏற்படுத்தியது உண்மையே. ஆனால், இப்புதுமலர்ச்சிக்கு கிரேக்க, உரோமப் பண்பாடுகள் மட்டுமே காரணம் என்று கூறமுடியாது. ஏனெனில், அப்பண்பாடுகள் கிரேக்கமும் உரோமும் அழிவுறாமல் காக்கவில்லை. அந்நாடுகள் அய்ரோப்பாவிலேயே இருந்தாலும், அவற்றில் அம் மறுமலர்ச்சி முழுதும் ஏற்படவுமில்லை. வடக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகளிலேயே அவை புதுமலர்ச்சி தூண்டின. வடக்கும் மேற்கும் பண்படாப் பகுதிகள். தெற்கும் கிழக்கும் பண்பட்டவை. ஆனால், வளர்ச்சிக்குரிய ஏதோ ஒரு பண்பு பண்படாப் பகுதிகளில் இருந்தது. அப்பண்பு பண்பட்ட பகுதிகளில் குன்றிவிட்டது. ஆனால், வளர்ச்சி குன்றிய பண்பட்டபகுதி வளர்ச்சிக் கூறுடைய வடபகுதிக்குத் தூண்டுதல் தந்தது. மறுமலர்ச்சியின் மறைதிறவு இதுவே. நற்பண்பு அயற்பண்பாயினும் பிறர் பண்பாட்டு மலர்ச்சியைத் தூண்டவல்லது. நம்மிடையே இன்று ஆங்கிலப் பண்பாடு அத்தகைய தூண்டுதலே தந்துள்ளது. நாம் நம் பண்பில் நின்று