அதன் தூண்டுதல் பெற்றால், புதுமலர்ச்சியின் வேகம் இன்னும் மிகுதியாகும் என்பது உறுதி.
எல்லா மொழிகளிலும் உள்ளார்ந்த நற்பண்புகளும் உண்டு. உள்ளார்ந்த அல்பண்புகளும் உண்டு. அல்பண்பு தேய, நற்பண்பு வளருமானால், அம் மொழியில் வளர்ச்சி ஏற்படும். நற்பண்பு வளராவிட்டால் அல்பண்பே வளர்ந்து வளர்ச்சி தடைப்படும். அல்லது அது அழிவுறும். அயற்பண்புகள் ஒருமொழிக்குச் செய்யக் கூடியதெல்லாம், நற்பண்பைத் தூண்டி வளர்ப்பதோ, அல் பண்பைத் தூண்டி அழிப்பதோ மட்டுமே. அயற்பண்பு ஒரு மொழியின் பண்பாக இரண்டு வழியிலும் வளர்ச்சி தளர்ச்சி பெறமாட்டா.
தமிழின் தனிப் பண்புகள் எவை: அப் பண்புகளிலும் நற்பண்புகள் எவை, அல்பண்புகள் எவை என்று நாம் அறிந்திட வேண்டுவது இன்றியமையாதது. இவை இரண்டையும் தற்கால உருவிலேயே நாம் காணக் கூடுமானாலும், அவற்றின் முழு விளக்கத்தையும் இயல்புகளையும், தோற்ற வளர்ச்சி தளர்ச்சி வரலாறுகளையும், அவற்றின் பழைமையிலேயே நாம் காணலாகும். பழம் பண்பிலூறிய மொழியின் இக்குணங்களையும் குறைகளையும் நன்கறியாமல், மொழியின் வருங்கால வளர்ச்சிக்குத் திட்டமிடுவது எளிதன்று. நம்மில் இன்று பழம் பெருமைகள் பாடுபவர் உண்டு. அதன் இன்றைய குறைபாடுகளை எடுத்துரைப்பவர் உண்டு. ஆனால், தமிழின் தனிப்பண்புகளை அதாவது அதன் தனிச்சிறப்புகளையும் அதன் தனிக்குறைபாடு களையும் ஆராய்ச்சி முறையில், வரலாற்று முறையில், உலகப் பின்னணியின் ஒப்பீட்டு முறையில் விளக்கமாக உணர எவரும் முயற்சி செய்வதில்லை. இனியேனும் இதில் நாம் கருத்துச் செலுத்துதல் வேண்டும்.
நாம் சிறப்புகளை நாம் அறிவது எதற்காக? நம்மை நாமே புகழ்ந்து கொள் வதற்காகவா? அன்று! அல்லது வேலிக்கு ஓணான் சான்று கூறுவதுபோல நமக்கு நாமே சான்று கூறுவதற்கும் அன்று. நம் சிறப்புகளை அறிவதன் மூலம் நாம் உலகில் முன்பு முந்திக்கொண்டிருந்ததன் காரணங்களை அறிந்து, அவற்றுக்குத் தக்க சூழ்நிலையமைத்து மீண்டும் செயலாற்ற வைத்து நம் மொழியை வளர்ப்பதற்காகவே.