பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

நம் குறைபாடுகளை அறிந்துகொள்வதும் அவற்றை வாளா ஏற்று நம் தலையிலடித்துக் கொள்வதற்காக அன்று. முதன்மை நிலையிலிருந்து கடைமை நிலைக்கு நம்மைக் கொண்டுவந்தது இக் குறைபாடுகளே யாதலால், அவற்றை உணர்ந்து திருந்துவதன் மூலம் நாம் மீண்டும் முதன்மை நிலை நோக்கி முன்னேறலாம். இதனால், நாம் முன்னைய முதன்மை நிலையையும் தாண்டிச் செல்ல முடியும் என்று துணிந்து கூறலாம்.ஏனென்றால், முன்னைய முதன்மை நிலை தோழமையற்ற முதன்மை நிலை-அது ஒரு தனிக்கொடுமுடியாயிருந்தது. இன்று நாம் அடையக்கூடும், முதன்மை நிலை தோழமையோடு, துணையோடு கூடியது. உலகு இமயமாக, நாம் அதன் 'தவளகிரி' கௌரிசங்கர் (எவரெஸ்ட்) முகடுகளாக விளங்க நாடுவதே நம் வருங்காலக் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்று. அது ஒரு வளராத மலைக் கொடுமுடியா யிராமல், வளரும் உயிர் முகடாயிருத்தல் வேண்டும். அதாவது உலகை வளர்த்து நாமும் அதனுடன் வளர்தல் வேண்டும்.

சிலர் குறைபாடுகளில் கவனம் செலுத்த விரும்ப மாட்டார்கள். வேறு சிலர் சிறப்புகளில் கவனம் செலுத்த விரும்ப மாட்டார்கள். ஆனால், உண்மையில் இவ்விரண்டும் ஒன்றோ டொன்று இணைந்தவையே. நம் குறைபாடுகள் நம் சிறப்புகளுடன் கூட உடன் பிறப்பாகவே வளர்ந்துள்ளன. குறைபாடறிந்தே குணம் பெருக்க முடியும். குணமறிந்துதான் குறைபாடு குறைக்க முடியும். எனவேதான் குணம் குறை நாடி, உவப்புவர்ப்பின்றி ஆராய்தல் இன்றியமையாததாகிறது.

குணங் குறை இரண்டிலும் உலகில் நம் இடத்தை நாம் வரையறுத்து உணர வேண்டுமானால், நம் சூழ்நிலைகளை நாம் எந்த அளவுக்கு மாற்றி யமைக்க உதவியுள்ளோம், அல்லது எந்த அளவுக்கு நாம் நம் சூழ்நிலைக்கு இயைய மாறியுள்ளோம் என்பதை நாம் உணர்தல் நலம். அதாவது உலக மொழிகளில், நாகரிகங்களில், பண்புகளில் நாம் இதுவரையிலும் ஒரேயடியாகத் தனித்து வாழ்ந்துள்ளோமா, பிற இனங்களுடன் தொடர்பு கொண்டுபடிப்படியாக மாறியோ, மாற்றியோ வந்திருக்கிறோமா? மாறி, அல்லது மாற்றி வந்திருந்தால் அதன் இன்றைய விளைவுகள் யாவை? அதன் பலாபலன்கள், நம் பலாபலன்கள், உலகுக்குரிய பலாபலன்கள் எவை என்றும் நாம் காணுதல் வேண்டும்.