வளரும் தமிழ்
93
முடிமேயன்றி வேறல்ல. அவற்றைப் பின்பற்றி மட்டும் செல்வதால் உண்மை வளர்ச்சியும் ஏற்படாது. தேசிய மதிப்பும் அதனால் பெருகாது.
கலைத்துறையில் தமிழர் மறைந்த பண்பாடுகள்-இன்று பலர் மறந் திருக்கும் பண்பாடுகள் பல. கிராம வாழ்வும் உழவும் எளிய வாழ்வுமே கீழ் நாட்டுக்குரிய பண்பாடுகள் என்று பலரால் லேசாகக் கூறப்பட்டு வருகிறது. இதனைப் போற்றுதலாகக் கொள்பவரும் உண்டு; புறக்கணிப்பாகக் கொள்பவரும் உண்டு. ஆனால், சங்க இலக்கியத்தை ஒரு சிறிது புரட்டினாலும் கூடத் தமிழர் நகர வாழ்விலும், வாணிக - கைத்தொழில் வளர்ச்சியிலும், கடற்படை, கல்வி ஆகியவற்றிலும், ஆட்சி முறையிலும் உயர் வாழ்க்கைத் தரத்திலும் மேம்பட் டிருந்தனர் என்று காணலாம். நறுமணப்பொடி (Face Powder), வண்ணக் குழம்புகள் (Paints & lipsticks), நல்லாடை, துணிமணிகள் ஆகியவற்றில் சங்க காலத் தமிழன் அறிந்த வகைகள் தொகைகள் இன்றைய அமெரிக்க மேனாட்டினரையும் நாணச் செய்யும். திட்டமிட்ட நகரமைப்பு முறை மொகெஞ் சதாரோ காலத்திலிருந்து அணிமை வரை தமிழர் மரபாயுள்ளது. கிராம வாழ்க்கையில் கவிஞர் அமைதியைக் காணலாம். உழவில் ஒழுக்க நூலார் உயர்வு காணலாம். ஆயினும் கலைகள், அறிவியல்கள் பெருகுவது நகர்களிலேயே, தமிழர் நாகரிகம் மருதநிலப் பேரூர்களிலும் நெய்தல் நிலப் பட்டினங்களிலும் வளர்ந்ததேயாகும்.
மனித நாகரிகம் குறிஞ்சி (மலை) நிலத்தில் தோன்றி, முல்லையில் (காட்டில்) படர்ந்து மருதம், நெய்தல் (ஆற்றுப் பாங்கு கடற்கரை) களில் முதிர்ந்தது. உலகில் ஏனைய மக்கள் குறிஞ்சியளவில், முல்லையளவில், அணிமை வரை நின்றனர். தமிழர் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே மருத, நெய்தல் நாகரிகம் அடைந்திருந்தனர். துறைமுக நகர்களுக்குப் பட்டினம் என அவர்கள் பெயரிட்டது ஒன்றே இதனைக் காட்டும்.
2000 ஆண்டுகட்கு முன் இயல், இசை, நாடகம் என முத்திறம் வளர்த்த நாடு தமிழகம் ஒன்றே. அவற்றைக்கட்டமைத்துப் பேணக் கழகம் அமைத்த பண்பு வேறு எந்நாட்டிலும் இல்லை. ஆயினும், இடையில் (ஆரிய புராணக் காலத்தில்) நலிந்துவிட்டது. நாடகம் நடைபெற்ற தடத்தையே காணோம்.
சை