பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகார நூல், அதன் உரை ஆகியவற்றிலிருந்து பண்டை வளங்களை மட்டும் அறிகிறோம்.

பா, பாவினம் என்று தமிழில் இருவகைப் பாட்டுகள் இருந்தன. இவற்றுள் பாக்களுக்கு மட்டுமே இயல் துறை இலக்கணம் உண்டு. அதிலும் வஞ்சி கலிப்பாக்களுக்கு விளக்கமான இலக்கணமில்லை. இவையும் பாவினங்களும் இசை நாடகங்களையே பெரிதும் சார்ந்தவை. இப்பாவினங்களும் நாடகமும் இன்று மலையாள நாட்டில் எப்படியோ இறவாது நிற்பதுடன், நாடக மரபு புது வளர்ச்சி பெற்று உலகப் புகழ் கண்டுள்ளது. ஆனால், சிலப்பதிகாரமே ஒரு நாடகம் என்றும், மலையாளிகளின் சாக்கையர் கூத்தாக அது நடிக்கப்படவே அமைந்ததென்றும் தமிழர் அறியாதிருக்கின்றனர்.மலையாளத்தின் நாட்டுப் பாடல்களும், நாடகமும் தமிழறிஞரால் சிலப்பதிகார முன்மாதிரியுடன் தழுவியாக்கப்படுமானால், தமிழகம் மேம்படுவதுடன் அவற்றால் மலையாள நாட்டுக்கும் புத்தாக்கம் ஏற்படும்.

தென்னாடு, வடநாடு ஆகியவற்றின் கலைகளையும், கிரேக்க நாடு மேலை நாடு ஆகியவற்றின் கலைப் பண்புகளையும் கண்டுணர்ந்து தமிழர் தமிழின் எதிர்கால வளர்ச்சியில் முனைதல் வேண்டும். அரசியல் காரணமாக ஏதோ ஒரு இந்திய மொழியையும், ஏதோ ஓர் மேனாட்டு மொழியையும் கற்பதுடன் தமிழர் அமையாமல் பரந்த மொழியறிவுடன் உலகக் கலை, உலக அறிவு ஆகியவற்றுடன் இணையும்படி பலதிற மொழிகளும் பயிலுதல் வேண்டும்.

தென்னாடும் சரி, வடநாடும் சரி, நெடுங்காலமாகப் பாரத, இராமாயணப் புராணங்களிலும் வாழ்க்கைத் தொடர்பற்ற கலைச் சுவையற்ற கண்கட்டுக் கற்பனைகளிலும் உழல்கின்றன. வடமொழி இலக்கியங்கள் பெரும்பாலும் இவ்வடிமைப் பண்பிலேயே நின்றுள்ளன. தமிழர்களுக்குப் பண்டைத் தமிழகச் சங்க இலக்கியமும் மேனாட்டிலக்கியமும் நல்ல வழிகாட்டிகளாகும். ஆனால், இவற்றைக்கூடக் குருட்டுத்தனமாகப் பின்பற்ற வேண்டுவதில்லை. அவற்றின் அடிப்படையில் புத்துரு ஆக்கலே சால்புடையது.