நாடகத்தைவிடப் படக்காட்சி,பேசும் படம் உயிர்ப் பண்பு நிறைந்தது. அத்துடன் நாடகத் துறையைவிட இவை நிலையான பயனுடையவை. மக்கள் அறிவு வளர்ச்சி, கல்வி ஆகிவற்றுக்குப் படக்காட்சியை ஒத்த நல்ல கருவி வேறில்லை. ஆனால், அதில் கலைப் பண்பு இன்னும் ஏற்படவில்லை. வாழ்க்கைத் தொடர்போ மருந்துக்குமில்லை. புராணப் படங்கள் புராணங்களைக்கூடக் கெடுத்துவிடத் தக்கவையாயுள்ளன. அண்மையில் இவ்வகையில் தனிப்பட்ட ஒரு சிலர் முயற்சியால் முன்னேற்றம் ஏற்பட்டுப் பட்டினத்தார், சிட்டாடல் ஞான சௌந் தரி முதலிய படங்கள் தோன்றியுள்ளனவாயினும் வாணிகக் கலைஞர்,போலிச் சமயவாதிகள் ஆகியவர்களின் ஆதிக்கம் கலையுலகில் இன்னும் விட்டபாடில்லை. பாரதி பாடல்போலவே தமிழிலக்கியத்தின் பிற பாடல்களும் உணர்ச்சியுடன் புது மெட்டுக்களோடிணைந்து கலையில் இடம் பெறுதல் வேண்டும். பழைமையே புதுமைக்கு உரம் என்னும் உண்மையைத் தமிழர் மறக்கவிடக்கூடாது.
என்.எஸ்.கேயின் ‘கிந்தனார்' நாடகக் களத்தில் ஒரு புதுத்துறை, இதுபோன்ற புதுத்துறைகளை மக்கள் ஆதரித்தல் வேண்டும். கலைப் பண்பை மறந்து வேறு சில வசதிகளையும் சோம்பல் வாழ்வையும் எண்ணி மக்கள் தவறான படங்களை ஆதரிக்காதவாறு கலைஞர், அறிஞர் அவர்கட்கு வழி காட்டுதல் வேண்டும்.
முத்தமிழும் முறையாக விரவிய நாடகம், படக் காட்சி தமிழகத்துக்கு மறுமலர்ச்சியும் உலகுக்குப் புதுமையும் தரும்.
கலைத் துறையில் கூடிய மட்டும் தனித் தமிழ் பேணலின் இன்றியமை யாமை இன்று நன்கு உணரப்படவில்லை. தமிழ் இன்று சற்று நலிந்திருப்பினும் உலகின் மற்றெல்லா மொழி களையும்விட நுட்பமான சிறப்புகள், உள்ளார்ந்த வளர்ச்சி வித்துகள் அதில் மிகுதி உண்டு. மொழியிலும் தேசியம் பேணித் தேசியத் தமிழாகிய தனித்தமிழ் வளர்த்தால் தமிழகத்தில் இன்று கனவில் கூடக் காணமுடியாத புது வளர்ச்சி ஏற்படுவது உறுதி.