பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

97

சாரியையும், கன்னடத்தில் பிறந்த மத்துவாச்சாரியையும், வங்கத்தில் பிறந்த சைதன்னியரையும் இந்தியா முழுவதுமே வேற்றுமையின்றிப் போற்றவில்லையா?

ல்

ஆனால், தமிழைப் பற்றி மட்டில் இப்பரந்த மனப்பான்மை எங்கோ ஒளிந்தது. மேன்மேலும் ஒளிந்துகொண்டே வருகிறது. தமிழ் நாட்டின் திருவள்ளுவர்-அவரைவிட உயர்ந்த ஒழுக்க நூலாசிரியர் பிற இந்திய மொழிகளில் மட்டுமல்ல, வடமொழியில் மட்டுமல்ல, உலகில் எந்த மொழியிலுமே, எக்காலத்திலுமே, இருந்ததில்லை, ஒரு வேளை இருக்கப் போவதுமில்லை என்பதை எல்லாரும் ஒத்துக்கொள்கின்றனர். ஆனால், காசியிலும், கள்ளிக் கோட்டையிலும், பூனாவிலும், விசாகப்பட்டினத்திலும் முழங்கும் நூல் அதுவா? நேர்மாறாகக் கீதையும் ஒரு நூல், அதனை ‘அங்கிங் கெனாதபடி எங்கும்'- தமிழகத்திலேயும் காவிரிக்கரை, வைகைக்கரை, தாமிர வருணிக்கரை எங்கும் தவறாமல் ‘பாராயணம்' செய்வதைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்!

வள்ளுவர் நூலின் ஒழுக்கம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், சங்க இலக்கியங்கள், நாடகக் காவியமான சிலம்புச் செல்வம், கற்பனைக் களஞ்சியமான சிந்தாமணி, பக்திப் பாசுரங்களான தேவார, திருவாசகங்கள். வைணவப் பாசுரங்களான திருவாய்மொழி முதலிய நாலாயிரந் தமிழ், பக்திக் காவியங்களான பெரியபுராணம் கம்பராமாயணம் இவை கங்கைக் கரையிலும் கோதாவரிக் கரையிலும் பேசப்படவாவது செய்வதுண்டா?

இவையெல்லாம் பழைமையுடையவை யல்லபோலும்! அதனால்தான் பிறமொழியாளர் போற்றவில்லை என்றால் ஓரளவு மனஅமைதி யடையலாம்.

இறந்த இலக்கியம் போக இன்றிருக்கும் தமிழிலக்கியத்தில் பெரும் பகுதி வடமொழியில் இலக்கியமே ஏற்படாத காலத்தைச் சேர்ந்தது. சங்க இலக்கியம் (அதுவும் கடைச்சங்க இலக்கியம் மட்டும்தான்) அளவிலும் பண்பிலும் உலகின் ஒரு தனி இலக்கியத்துக்கு ஒப்பானது. அது அத்தனையும் வடமொழியின் முதற் பெருங் கவிஞன் காளிதாசன் காலத்துக்கு முந்தியது.