இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழர் போற்றும் மாநிலம், தமிழர் பின்பற்றும் மொழி, தமிழர் மேற்கொண்ட சமயம், தமிழரிடைத் தவழ்ந்துவந்த மாயப் பழக்க வழக்கங்கள் யாவும் தமிழர்க்கு ஊறு தருவதையும்; தமிழரிடையே தமிழாராய்ச்சி விட்டதாகக் காணப்படும் சிலர் உணர்ச்சியால் தமிழரல்லாதாராயிருப்பதும் கண்டு, தமிழுக்கு முதலிடம் என்ற கிளர்ச்சியையும், தமிழர்க்கே தமிழகம் என்ற கிளர்ச்சியையும், அறிவும் உணர்ச்சியும் வீரமும் மிக்க தமிழர் தோற்றுவித்தனர்.
இவ்வியக்கம் மிகப் பழந்தமிழ்க் கொள்கையையும், பண்பாட்டையும் மீண்டும் ஏற்படுத்த முயல்வது, பழைமைப் பற்றால் அன்று. அப்பழைமையில் கலந்துள்ள பெருமை நோக்கியும், அதில் அமைந்த தமிழர் உயிர் நிலைத் துடிப்பையும் ஊக்கத்தையும் கண்டுமேயாகும். அது புதுப் புரட்சிவேகத்துடன் எழுந்து கருத்து வேற்றுமைகள், சமய வேற்றுமைகள், கட்சி வேற்றுமைகள் ஆகிய எல்லாக் கரைகளையும் உடைத்துப் பெருவெள்ளமாகப் பொங்கிவருகிறது. அதனைத் தடைப்படுத்த யாராலும்-இவ்வீரத் தமிழரால்கூட இனி ஆகாது.
தமிழர்மொழியை அவர்கள் செம்மைப்படுத்த எண்ணினர். எதிர்ப்பு இருந்தது. தமிழகஞ் சார்ந்த அயல் நாடுகள் இத்தகைய எதிர்ப்புகளால் குலைந்தே தமிழ்ப் பண்பினின்று நழுவின என்பதை அம்மொழியின் வரலாறுகள் காட்டுகின்றன. ஆனால், தமிழின் நல்ல காலம்; மொழி செப்பமுற்றே வருகிறது. தமிழர் கண் குளிர, எதிர்ப்பவர் கண்ணீர் உண்ணீராக ஒடுங்கத் தழைத்தே வருகிறது.
தமிழர்க்குத் தமிழியக்கத்தார் அரசியல் விழிப்பையும் எழுச்சியையும் ஊட்டினர். எதிர்ப்புமிகுந்தது. பிளவுகள் மலிந்தன. ஆனால், இங்கும் தமிழன்னை அருளால் தமிழ் மக்கள் உள்ளூர ஒற்றுமையடைந்து வருகிறார்கள்.
சமயத் துறையிலே தமிழியக்கம் தலையெடுத்தது. 'நம்மை வளர்த்த மொழியை நாம் செப்பம் செய்தோம்; நாம் வளர்த்த அரசியலை அடிமை நிலையிலும் செப்பம் செய்து வருகிறோம். நாமே படைத்து வளர்த்த நம் சமயத்தையும் இனிச் செப்பம் செய்வோம் என்றெழுந்தனர் வீரத்தமிழ் மரபினர்.