இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மொழிக் கோட்டை மண் கோட்டை; அதில் பகைவர் பதுங்க இடமில்லை. அரசியல்கோட்டை முள் கோட்டை. அதில் வீரத்தமிழன் கால் கிழிய நடந்தான். பகைவர் முள் மேல் கால் வைக்க அஞ்சி வழிவிட்டு வருகின்றனர். ஆனால், சமயக்கோட்டை மதிலும், ஞாயிலும், சுரங்க அறைகளும் உடையது. கோட்டை யினுள் இருப்பவர்க்கு மாறா வெற்றி தரும்படி அமைந்தது. ஆயின். அந்தோ இன்று கோட்டைக்குரியவர் உள்ளிருக்க வில்லை. நண்பர் சிலரை நம்பிப் பாதுகாக்க விட்டு விட்டு வெளித் தங்கியுள்ளனர். கோட்டை மதில்கள் போலி நண்பர் எறிபடைகள் வீசும் இடமாயின. சுரங்கங்கள் படைக்கலங்கள் அவர்கள் கையில்! கோட்டையின் கொடிகள்கூட இன்று அவர்கள் கொடிகள்! தமிழியக்கத் தார் இம்முறையில் போராட வேண்டியிருக்கிறது.
தமிழியக்கத்தார் தமிழர் சமய வாழ்வைச் செப்பம் செய்ய முயன்று சோர்வுற்று வருகின்றனர். தம் கோட்டை தம் எதிரி வசமானால் அதை அழிக்கத் தானே வேண்டும் என்கின்றனர் சில இனமறவர். ஆனால், ஆண்டு முதிர்ந்த சிலர், அந்தோ நம் பிள்ளைகள், நம் மாதர் கோட்டையினுள் உள்ளனரே. அவரைக் கருதியேனும் அழிவு தவிர்த்தல் வேண்டுமே என்று கவல்கின்றனர்.
தமிழர் சமயம் மாசேறியுள்ளது. கழுவினால் மாசு போகும். ஆனால், கழுவும் நிலை கடந்துவிட்டது. மாசு படிப்படியாய் ஏறி உடலில் நோய்ப் புழு மலிந்து விட்டது. நோய் தோல் கடந்து, தசை கடந்து, குருதியில் பரவி, எலும்பில் தோய்ந்து விட்டது. பல உறுப்புகள் புற்றேறின. நேரத்தில் கழுவாதவற்றை ஊசியிட்டு மாற்றி யிருக்கலாம்; காலத்தில் ஊசியிடாதவற்றை அறுவைசெய்து மாற்றியிருக்கலாம். இப்போது ஒன்றிரண்டு உறுப்பேனும் அறுத்தெறியப்படுதல் வேண்டும் நிலையிலிருக்கிறது. உறுப்பை அறுத்தெறிவதா? என்று ஆர அமர்ந்து செல்வர் தயங்கினால், போவது இனி உறுப்பன்று, உயிர்ப்புத்தான்.
தமிழர் சமயத்தின் மாசா? எது மாசு, எது உடல்?
தமிழியக்கத்தார் தமிழர் சமயம் எது என்று காணும் வகையில் ஒற்றுமைப் படவில்லை. ஒற்றுமைப் படவும் முடியாது.