இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆனால், இவற்றுக்கு மாறான கருத்துகளும் இன்றைய தமிழர் சமயத்தில் எண்ணற்றவை. அவற்றுள் சில, சாதி வேறுபாடு, தீண்டாமை ஆகியவற்றின் ஆதரவு, வடமொழி தெய்வமொழி எனல், வடமொழி மந்திரம் ஓதுதல், சோம்பர்க்கும், எத்தர்க்கும் ஈதல், தமிழர் சமயத்துக்கு எதிரான கொள்கை யுடைய பிராமணர்கட்குக் கோவிலில் நுழைவுரிமை மட்டுமன்றித் தலைமையும் கொடுத்தல் ஆகியவை. தமிழ் நூல்களில் பார்ப்பனர் குடியிருப்புச் சேரி என்று கூறப்பட்டிருக்கிறது. ஊருக்குப் புறம்பே புல் வீடுகளில் வாழ்ந்தனர் அவர்கள். கோவிலை அவர்களுக்கு விட்டுப் பக்தர் (தேவரடியார்)களுக்குப் பாதுகாப்பாக அவர்களை முதல் தெருவிலும் விட்ட செயலுக்குத் தமிழர் எதுவும் படல் வேண்டும்!
இச்செயல் செய்தவர் தமிழ் அரசரே-சிறப்பாகப் பிற்காலச் சோழர்,நாயன்மார் காலத்திலும் சேக்கிழார் காலத்திலும் இருந்த சோழரே என்பதை நோக்க அவர்கள் வீரத்தைப் புகழ்வதா, வீண் வம்புக்கு இகழ்வதா என்று கூறமுடியாத நிலையிலிருக்கிறோம்.
இந்து மதம் என்று இன்று கூறப்படுவது சிவ நெறியையும் திருமால் நெறியையும் சேர்த்துதான். ஆனால், இவை கலப்பற்ற சிவ நெறியும் திருமால் நெறியும் அல்ல. அவற்றுடன் கலந்து நிற்கும் மூன்றாம் நெறி யொன்று உண்டு. அந்நெறி சில வகையில் சிவ, திருமால் நெறியை விடச் சிறந்தது. அந்நெறியில் ஒரே ஒரு சாதிதான் உண்டு. (ஆயினும் அந்நெறியில் சேராத சிவ நெறியாளர் திருமால் நெறியாளர்களிடையே சாதி வேறுபாட்டை ஏற்படுத்தி வளர்ப்பது அவர்கள் உயிர்நிலைக் கடமை) அந்நெறிக் கென்று கோவிலும் உருவமும் கிடையாது (ஆனாலும் தனக்கெனக் கூடில்லாமல் தான் முயன்று ஊட்டாமல், காக்கையின் கூட்டில் காக்கை ஊட்ட வளர்வதாகக் கூறப்படும் குயில் குஞ்சுகள் போல, சைவர் வைணவர் செலவில் எழுப்பப்பட்ட கோவில்களில் அவர்கள் உருவினையே வைத்துக் கொண்டு அவர்கள் செலவில் வாழ்ந்து அவர்கள் தெய்வத்தின் பெயரை வைத்தே அவர்களை என்றென்றைக்கும் அடிப்படுத்த வழி கண்டவர்கள் அந்நெறி யாளர்கள்). பொருளும் உயிரும் உள்ள சிவ, திருமால்நெறி வேதங்களை ஓதுபவர்களை இழிவு படுத்தித் தம் பொருளற்ற, பிதற்றல் வேதத்தை வைத்து அந்நெறிச் செல்வர் பணமும் பறித்து அவர்களை அவமதிக்கவும் வழிசெய்வர்.