பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. வடசொற்களென மயங்க இடந்தரும் தமிழ்ச்சொற்கள்

மொழிப்பற்று, நாட்டுப்பற்று, சமயப்பற்று முதலியவை மக்கள் வாழ்க்கை யின் வளர்ச்சிக்குச் சிறந்த தூண்டுதல்களாய் இருந்து வருகின்றன. ஆனால், பலர் அவற்றை நேர்மையற்ற குறுகிய முறையில் மேற்கொண்டு அவற்றையே நாகரிக வளர்ச்சிக்கும் சிறப்பாக நடுநிலை ஆராய்ச்சிக்கும் முட்டுக்கட்டை களாக வழங்கி வருகிறார்கள். அதிலும் இவ்வகையில் நம் நாட்டில் காணப்படும் நிலைமை மிகமிகப் புதுமையானது. பொதுவாக உலகில் ஆராய்ச்சிக்குத் தடையாகக் கருதப்படும் மொழிப்பற்று மக்கள் உணர்ச்சிக்குத் தாயகமான தாய் மொழிப் பற்றேயாகும். ஆனால், தமிழ்நாட்டின் ஆராய்ச்சியில் காணப்படும் பிற்போக்குத் தாய்மொழிப் பற்றால் அன்று, பிறமொழிப் பற்றாலேயே ஆகும். இது வியப்புக் கிடமன்றோ?

தமிழ்மொழியும் வடமொழியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்விந்தியக் கண்டத்தில் ஒருங்கே வளர்ச்சி யடைந்து வருகின்றன. எனவே அவற்றுள் ஒன்றன் பண்புகள், சொற்கள், கருத்துகள் முதலியவை இன்னொன் றிலும் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்த்தல் இயற்கையே. ஆனால், தமிழில் வடசொற்களையும் வடவர் பண்புகளையும் கருத்து களையும் தேடித் துருவித் தொகுப்பதில் சளைக்காத அறிஞர் பலர் வட மொழியில் உள்ள தமிழ்ச் சொற்கள், கருத்துகள், பண்புகள் ஆகியவற்றைத் தேட எண்ணுவதுகூட இல்லை. மேலைநாட்டறிஞர் அல்லது வடநாட்டறிஞர் அவற்றைத் தேடி அறிவித்தால்கூட அன்னத்தின் இறகுகளில் அல்லது தாமரை யிலையில் பட்ட நீரால் அவை ஈரமடையாததுபோல, அவர்கள் கருத்தையும் செயலையும் அது சற்றும் தாக்காமல் புறக்கணித்துத் தள்ளப்படுகிறது.