10. தமிழும் தமிழின மொழிகளும்
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பல ஆயின' என்று தமிழ்மொழியை நோக்கிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், அரசியல் தலைவர் சிலரும், தமிழ்ப் புலவர் சிலரும் இதைக் கூறத் தயங்கி வருகிறார்கள். இதற்குக் காரணம் தமிழனுக்கு நெடுநாளாக ஏற்பட்டிருக்கும் தோல்வி மனப்பான்மையையும், ‘அஞ்சி அஞ்சிச் சாகும்' அச்சத்தையும் பலர் பயன்படுத்திக் கொண்டதே யாகும். "தமிழர் இப்படித் தம் புகழ் பாடி என்ன பயன்?” “சரியான புலமையெனில் பிற நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்' 'இச்செய்தியை ஏற்றுக்கொள்ளும் மலையாளி, கன்னடியன், தெலுங்கன் யார்’ என்று அவர்கள் கேட்கிறார்கள்.
இதை ஒப்புக்கொள்ளும் மலையாளி, கன்னடியர், தெலுங்கர் உண்டு. அதுவும் பொதுப்படையான ஆட்கள்கூட அல்லர். கல்லூரியும், பல்கலைக்கழக மும் ஒப்பும் முதல்தரத் தலைவர்கள். அத்தகையோர் உரைகளில் சிலவற்றைக்
காண்போம்.
முதலில் ஒரு மலையாள அறிஞர் உரையைக் கீழே தருகிறோம்.
திருவிதாங்கூர் அரசரின் மலையாள மொழியாசிரியரான ஏ.கிருஷ்ண பிஷாரடி1927 மார்ச்சில் சென்னைப் பல்கலைக்கழக ஆதரவில் ‘மலையாள மொழியும், இலக்கியமும்' என்ற ஆராய்ச்சிச் சொற்பொழிவிடையே மலையாள மொழியில் கூறியதைத் தமிழ் எழுத்தில் அப்படியே தருகிறோம்.