பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11. திருக்குறளும் வடமொழி நூல்களும்

திருவள்ளுவர் தமிழுலகுக்கு அளித்த முப்பாலமிழ்தம் எல்லாச் சமயத்துக்கும், எல்லா நாட்டு மக்கட்கும் மட்டுமன்றி முக்காலத்துக்கும் பொதுவான முழு முதல் தமிழ் நூல். இத்தகைய சீரிய சிறப்புடைய நூல் உலகில் வேறெம்மொழியிலும் இல்லை என்பது கண்டு, தமிழர் களிப்படைகின்றனர்.

'வெறெம்மொழியிலும்' என்பதில் வடமொழியும் அடங்கித்தான் கிடக்கிறது. அதை மறுப்பாரும் இல்லை. வேறெம்மொழியிலும் எப்புலவர்க்கும் தரப்படாத 'தெய்வப் புலவர்' என்ற புனை பெயரும் திருவள்ளுவர்க்கே சிறப்பான பெயராய் வழங்கப்படுகிறது. தெய்வ மொழி என்று தன்னாலும், பிற பலராலும் கொள்ளப்பட்ட வடமொழியிலிருந்து அதற்கு- அல்லது-அதில் கண்ட கருத்துக்கு மூலம் தேடப் பெரும்பாடுபட்ட உரையாசிரியர் பரிமேலழகரே தம்மையும் மீறித் தம் நாவார, உளமார அவரைத் தெய்வப் புலவர் என்று கூறிக் கைகூப்பி வணங்கியிருக்கின்றார்.

திருவள்ளுவர் திருக்குறளின் மாண்பைப் பிற்காலத்தவர் எளிதில் உணரும்படி 'மணி உரை' எழுதிய பரிமேலழகப் பெரியார்க்குத் தமிழகம் எவ்வளவோ கடமைப்பட்டிருப்பது உண்மை. ஆனால், அவர் தேடிய வடமொழி மூலங்கள் உண்மையில் திருவள்ளுவர்க்கு மூலங்கள் ஆயிருக்கக் கூடுமா?- அல்லது-அது முற்றிலும் அவர் வடமொழிப் பற்றின் விளைவா-? என்பதைத் தமிழன்பர் ஆராய்தல் அமைவுடையதே.

தமிழர் இதனை ஆராய்வதில் மிகுதி அக்கறை காட்டாதது இயல்பே.பாலமிழ்தம் கண்டவிடத்து அதை உண்பதை விட்டு, அது யார் சமைத்தது என்று அறியக் காத்திருப்பவன் அறிவாளியாகமாட்டான். தமிழர்க்கு அறிவொழுங்கு காட்டிய திருவள்ளுவரும்.