பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152) ||

அப்பாத்துரையம் - 1

கொள்கை என்று கூடக் கூறலாம். எனவே, அரும்பாடுபட்டு இவ் வடமொழி ஒருமைப்பாடுகளைக் கண்ட பரிமேலழகர், திருவள்ளுவர் இந்நூல்களைக் கற்றுணர்ந்திருத்தல் வேண்டும் என்றெண்ணினர். பிற்காலத் தமிழர் பலர் எண்ணுவது போல், அவர்க்கு இது திருவள்ளுவரிடம் மதிப்புக் குறைந்த காரணத்தால் அல்ல; பரிமேலழகர் காலத்தில் புலவர் என்ற சொல் வடமொழிப் புலவர்க்கே முதலுரிமை யாயிருந்தது. எனவே, திருவள்ளுவரிடம் பரிமேலழகர் கொண்ட பற்றுதலின் காரணமாகவே அவர் பெரிய வடமொழிப் புலவராகவும் இருந்திருத்தல் வேண்டும் என்று அவர் எண்ணினார்.

பரிமேலழகர் காட்டிய இவ்வொப்புமைகளைச் சாக்காகக் கொண்டு இக்கால ஆராய்ச்சியாளர் சிலர் திருக்குறளுக்கு அவ்வடமொழி நூல்கள் மூலங்கள்-அல்லது-முதனூல்கள் என்று அவர் எண்ணியதாக மனப்பால் குடிக்கின்றனர். தமிழர் கருத்துப்படி முதனூல் எழுதத்தக்கவர் கடவுள்-அல்லது-கடவுள் நிலையிலுள்ள முனிவர்கள். வழிநூல் எழுதுபவர் அவர்வழி நிற்கும் அறிஞர் ஆகிய மனிதர்களே. வழி நூலாசிரியர் முதனூற் கருத்துகளைச் சுருக்கியும், விரித்தும், எளிமைப்படுத்தியும் புதுமுறைப்படுத்தலாம். முதனூலுக்கு மாறுபடவோ, மிகைப் படவோ அவர் எழுதார். முதனூலாசிரியரினும் அவர் சிறந்த வராகக் கொள்ளவும் படார். இந்நிலையில் வைத்துப் பார்த்தால் பரிமேலழகர் எண்ணம் தெளிவாகும். திருவள்ளுவர் புலமைக்குப் பாராட்டாகவே இவ்வொப்புமைகள் தரப்பட்டன. ஆனால், வழிநூல் அல்ல என்ற எண்ணத்தை வற்புறுத்தவே அவர் 'தெய்வப் புலவர்' என்ற பெயரை வலியுறுத்தி எடுத்தாண்டார். உரைப்பாயிரத்தில் அவர் மொழியை உற்று நோக்குவார்க்கு இது புலனாம்.

"இவற்றுள் (அதாவது அறத்தின் பிரிவுகளாகிய ஒழுக்கம், வழக்கு, தண்டம் ஆகிய மூன்றனுள்) வழக்கும், தண்டமும் உலக நெறி நிறுத்துதற் பயத்த(ன) வாவதல்லது, ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதிபயத்தற் சிறப்பில வாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வு மிகுதியானும், தேயவியற் கையானும் அறியப்படுதலானும்; அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப் புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது."